உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மொத ராத்திரி' படத்திற்கு சிலம்பரசன் பாராட்டு

'மொத ராத்திரி' படத்திற்கு சிலம்பரசன் பாராட்டு

அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில், ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'மொத ராத்திரி'. தெலுங்கின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் அதிகம் வந்தாலும் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை. 2 கோடி வசூலை மட்டுமே கடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். இதனால், படத்தை ரசிகர்களிடம் இன்னும் அதிகமாகக் கொண்டு சேர்க்க தயாரிப்பு நிறுவனம் முயற்சித்து வருகிறது. சில முக்கிய சினிமா பிரபலங்கள் படத்தைப் பார்த்து பாராட்ட வைத்து அதன் மூலம் இரண்டாவது வாரத்திலும் ரசிகர்களைக் கவர முயற்சித்து வருகிறார்கள்.

தற்போது நடிகர் சிலம்பரசன் இப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில், “'மொத ராத்திரி' திரைப்படத்தைப் பார்த்தேன், மிகவும் ரசித்தேன். பிற மொழிகளில் வெளியாகும் சிறிய, அழகான படங்களைக் கண்டறிந்து நாம் கொண்டாடுவது வழக்கம். அதேபோல, ஒரு புதிய குழுவுடன் புதிய முயற்சியாக ஒரு தமிழ்ப் படம் வரும்போதும், அதற்கு நாம் அதே அன்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

ஒரு கிராமத்துத் திருமணப் பின்னணியில், ஒரே இரவில் விரியும் கதை இது. இதில் வரும் பல கதாபாத்திரங்களும், சிறிய தருணங்களும் மிகவும் இயல்பாக அமைந்திருந்தன. கதைக்களம், நகைச்சுவை, மனிதர்களுக்கு இடையிலான உரையாடல்கள் மற்றும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு என அனைத்தும் மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டிருந்தன.

ஒரு புதிய இயக்குநரும் அவரது குழுவும், மண்ணின் மணத்தோடு கூடிய சுவாரஸ்யமான ஒரு படைப்பை உருவாக்கியிருப்பதைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இயக்குநர் ராஜா கருப்பசாமி, ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர், அத்துடன் இப்படத்திற்குத் துணையாக நின்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

தயாரிப்பாளர்களுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்... இது போன்ற படங்கள் மக்களைச் சென்றடைய கூடுதல் ஊக்கம் தேவைப்படுகிறது. தரமான படைப்புகள் நிச்சயம் கண்டறியப்பட வேண்டும். எனது ரசிகர்கள் மற்றும் சினிமா விரும்பிகள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். 'மொத ராத்திரி' திரைப்படத்தைத் திரையரங்குகளில் சென்று பார்த்து, அக்குழுவை ஆதரியுங்கள். முழு படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல திரைப்படங்களை உருவாக்குங்கள்,” எனப் பாராட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !