பிளாஷ்பேக் : கவனிக்கப்படாமல் போன 'சம்பூர்ண மகாபாரதம்'
புராண படங்களில் தொடங்கியது தான் சினிமா. இதில் அதிகம் படமானது ராமாயணம். ராமாயணத்தில் வரும் பல கேரக்டர்களை பின்னணியாக கொண்டு பல படங்கள் வந்தன. சமூக படங்களின் வருகைக்கு பிறகு புராண படங்களின் வருகை குறைந்து போனது. அப்படியான காலத்தில் பிரமாண்ட தயாரிப்பில் 1962ம் ஆண்டு வெளிவந்த படம் 'சம்பூர்ண மகாபாரதம்'. இந்த படம் மகாபாரதத்தில் வரும் பீமன் கேரக்டரை பின்னணியாக கொண்டு உருவானதால் அதற்கு 'மகாவீரா பீமன்' என்ற இன்னொரு பெயரும் இருந்தது.
டி.கே.பகவதி, அசோகன், விஜயலட்சுமி, எம்.ஆர்.ராதா, வி.நாகய்யா, நரசிம்ம பாரதி, எல்.விஜயலட்சுமி, என அன்றைக்கிருந்த முன்னணி நடிகர்கள் நடித்தார்கள். எஸ்.ஏ.சுப்புராமன் இயக்கினார். எம்.எஸ்.ஞானமணி இசை அமைத்திருந்தார். ஜெய்குமார் பிக்சர்ஸ் சார்பில் எம்.எல்.பதி தயாரித்திருந்தார்.
இந்த படத்திற்கு முந்தைய புராண படங்களில் கையாளப்பட்ட தொழில்நுட்பத்தை விட அதிகமான தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக 'உன்மாயம் அறியாத உலகேதடா' என்ற பாடலில் ஒரே பிரேமில் கிருஷ்ணரின் அனைத்து அவதாரங்களும் காட்டப்பட்டது. ஆனால் படம் ஏன் வரவேற்பை பெறவில்லை என்று தெரியவில்லை.