திரையுலகில் 25வது ஆண்டு : தேசிய விருது வாங்கியே தீருவேன் என்கிறார் கருணாஸ்
கருணாஸ் நடித்துள்ள 'என்ன விலை' என்ற படம் வருகிற செப்டம்பர் 17ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் மூலம் அவர் தனது திரைப்பயணத்தின் 25வது ஆண்டை நிறைவு செய்கிறார்.
இதுகுறித்து கருணாஸ் கூறும்போது “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், 'என்ன விலை' படம் எனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று. உண்மையாக சொல்வதென்றால், கடந்த 25 ஆண்டுகளாக இப்படியொரு படத்திற்காகவும், இப்படிப்பட்ட ஒரு படக்குழுவிற்காகவும் நான் காத்திருந்தேன். இயக்குநர் சஜீவ் பழூர் என்னிடம் கதை சொன்னபோது, உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இது அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை. ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகச் சிறப்பான பணியைச் செய்துள்ளனர். விருதுகளும், திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரங்கள் ஊக்கமளித்தாலும், ஒரு திரைப்படம் மக்களுக்கானது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள், சுயமரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசும் இப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொடும் என்று நம்புகிறேன்”என்றார்.
முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர் “இப்போது முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். மாமன், மச்சான், ஹீரோவின் நண்பன் போன்ற கேரக்டர்களை தவிர்த்து வருகிறேன். சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்து விட்டேன். அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாக தேசிய விருதை பெற்று விட வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காக கடுமையாக உழைப்பேன். பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பல விஷயங்களை பார்த்து விட்டேன் கடைசியாக நான் பார்க்க வேண்டியது தேசிய விருதை மட்டும்தான்” என்றார்.
என்ன விலை படத்தை மலையாள இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கி உள்ளார். ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். நிமிஷா சஜயன், விஜயலட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சித்தா தர்ஷன், மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.