ஆகஸ்ட் மாத ரிலீசில் எது 'டாப்'? எது 'வீக்'?
2026ம் ஆண்டில் கடந்து போன எட்டு மாதங்களில் தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரும் வசூல் என்பது எட்டாக்கனி ஆகவே இருக்கிறது. இதுவரை வெளியான சுமார் 140 படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு வெளியான படமாக 'கருப்பு' படம் மட்டுமே இருக்கிறது. 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்த அந்தப் படத்தின் வசூல்தான் இப்போது வரையில் இந்த 2026ம் ஆண்டின் நம்பர் 1 வசூல் படம்.
மொத்தமாகப் பார்த்தால் இதுவரையில் வெளியான 140க்கும் மேற்பட்ட படங்களில் அதிகாரப்பூர்வமற்ற வசூலாக விஜய் நடித்த 'ஜனநாயகன்' 300 கோடி வசூலைக் கடந்ததாகத் தகவல். அதற்கடுத்து 240 கோடி வசூலைக் கடந்த படமாக சூர்யா நடித்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் உள்ளது. 'டிசி, பராசக்தி' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே 100 கோடி வசூலைப் பெற்றுள்ளன. ஆக, 140 படங்களில் வெறும் 5 படங்கள் மட்டுமே 100 கோடி வசூலைக் கடந்துள்ளன என்பதைப் பார்த்தால் இந்த வருடம் தமிழ் சினிமா நிறையவே பின்தங்கியுள்ளது.
ஐந்தில் 2, ஆகஸ்டில்...
ஆகஸ்ட் மாதத்தில் வெளியான படங்களில் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் 240 கோடி வசூலையும், 'டிசி' படம் 100 கோடி வசூலையும் பெற்றுள்ளது. மேலே குறிப்பிட்ட 100 கோடி வசூலைத் தந்த 5 படங்களில் 2 படங்கள் ஆகஸ்ட் மாதம் வெளிவந்தவை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஆகஸ்ட் 7ம் தேதி, “டிசி, ஜிடிஎன், போட்டோகிராபர், வைப் பேங்க் ஆப் இந்தியா” ஆகிய படங்கள் வெளிவந்தன. தமிழ் சினிமாவின் தற்போதைய கமர்ஷியல் இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான படம் 'டிசி'. நாயகனாக அவர் நடித்த முதல் படமே 100 கோடி வசூல் என்பது பெரிய விஷயம். இயக்குனராக மட்டுமல்லாமல் இனி கதாநாயகனாகவும் அவர் வலம் வருவார்.
ஜிடிஎன்
பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான கோவையைச் சேர்ந்த ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றுப் படமாக வந்த 'ஜிடிஎன்' படம் ரசிகர்களைக் கவரவில்லை. மாதவன் நடித்து இதற்கு முன்பு வந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படம் போல இந்தப் படமும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்தை ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்க்காத காரணத்தால் படம் கவனத்தைப் பெறவில்லை.
ஆகஸ்ட் 14ம் தேதி, “மகுடம், விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'மகுடம்' படத்தை ரவி அரசு இயக்க படத்தை ஆரம்பித்தார்கள். ஆனால், அதன் பிறகு விஷால் படத்தை 'டேக் ஓவர்' செய்து ரவி அரசுவை நீக்கிவிட்டு அவரே இயக்க ஆரம்பித்தார். இயக்கத்தில் அவரது முதல் படமாக வெளிவந்த இப்படம் படுதோல்வியை அடைந்தது. ஓரிரு நாட்கள் கூட படம் தியேட்டர்களில் தங்கவில்லை என்பது கடும் அதிர்ச்சியைத் தந்தது.
இரண்டு 200 கோடி
தெலுங்கு இயக்குனர், தெலுங்கு தயாரிப்பாளர் என சூர்யா நடித்து வெளிவந்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்றாலும் படம் 240 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்த ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்களின் சொந்தக்காரராக மாறியுள்ளார் சூர்யா.
ஆகஸ்ட் 21ம் தேதி, “முன்தினம், மொத ராத்திரி, ராம் அண்ட் லீலா, சோளக் கொல்லை பொம்மை” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'மொத ராத்திரி' படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தன. கொஞ்சம் லேட் பிக்கப் ஆகி படம் குறிப்பிடத்தக்க வசூலைக் கொடுத்துள்ளது. படத்தின் தலைப்புதான் குடும்பத்து ரசிகர்கள் தியேட்டர்களுக்குச் செல்வதை யோசிக்க வைத்துவிட்டது. இன்னும் அதிகமான புரமோஷன் செய்திருந்தால் இந்தப் படம் வசூலைக் குவித்திருக்கும். அதைத் தயாரிப்பு நிறுவனம் செய்யத் தவறிவிட்டது.
ரியோ நடித்து வெளிவந்த 'ராம் அண்ட் லீலா' ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. இந்த ஆண்டில் இதற்கு முன்பு வெளிவந்த 'டபுள் ஆக்குபன்சி' படத்தின் கதைதான் இந்தப் படமும் என்பதே படத்தின் தோல்விக்குக் காரணம்.
ஆகஸ்ட் 28ம் தேதி, “அமரம், ஹாய், ஒன்ஸ்மோர்” ஆகிய படங்கள் வெளிவந்தன. நயன்தாரா, கவின் நடித்து வெளிவந்த 'ஹாய்' படத்திற்கு சுமாரான விமர்சனமும, சுமாரான வசூலும் கிடைத்துள்ளது. இருந்தாலும் படத்தின் சக்ஸஸ் மீட்டை இன்று இரவு நடத்த உள்ளது படக்குழு. அர்ஜூன் தாஸ், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்து வெளிவந்த 'ஒன்ஸ்மோர்' மிகச்சுமாரான காதல் படமாக அமைந்தது.
நேரடி ஓடிடி வெளியீடு
'பியார் பிரேமா காதல், ஸ்டார்' படங்களின் இயக்குனர் இளன், ஹீரோவாக அறிமுகமாகி இயக்கிய 'பியார் பிரேமா கல்யாணம்' படம் ஆகஸ்ட் 21ல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.
முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த 13 படங்களில் 2 படங்கள் 100 கோடி வசூல், 2 படங்கள் சுமாரான வசூல் என அசத்தல் ஆகஸ்ட் மாதமாகவே அமைந்துவிட்டது.
ஒரு மாதத்தில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு படங்கள் வெற்றி பெறுவது என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். அது போல வரும் நான்கு மாதங்களிலும் தொடர்ந்தால் 2026ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமையும்.
ஆகஸ்ட் 2026ல் வெளிவந்த படங்கள்…
ஆகஸ்ட் 7
டிசி, ஜிடிஎன், போட்டோகிராபர், வைப் பேங்க் ஆப் இந்தியா
ஆகஸ்ட் 14
மகுடம், விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
ஆகஸ்ட் 21
முன்தினம், மொத ராத்திரி, ராம் அண்ட் லீலா, சோளக் கொல்லை பொம்மை, பியார் பிரேமா கல்யாணம் (நேரடி ஓடிடி ரிலீஸ்)
ஆகஸ்ட் 28
அமரம், ஹாய், ஒன்ஸ்மோர்