பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரை பேயாக சித்தரித்ததால் தோல்வி அடைந்த படம்
மக்கள் திலகம் எம்ஜிஆரின் சிறப்பு அம்சமே அவரது அழகான தோற்றம்தான். ஆனால் அந்த தோற்றத்தை கதைக்காக பேயாக சித்தரித்ததால் 'நாம்' என்கிற படம் தோல்வி அடைந்ததது. கதைப்படி எம்ஜிஆர் ஒரு ஜமீன் குடும்பத்து வாரிசு. இந்த ரகசியம் வில்லன் வீரப்பாவிற்கு தெரிய வருகிறது. அவரை தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து சொத்துக்களை அடைய நினைக்கிறார்.
ஆனால் எம்ஜிஆர் வேறொரு பெண்ணை காதலிக்கிறார். இதனால் எம்ஜிஆரை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட அவரது வீட்டுக்கு தீ வைத்து விடுவார் வீரப்பா. அதில் எம்ஜிஆர் இறந்து விட்டதாக எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் எம்ஜிஆர் தீயில் உருக்குலைந்து உடலோடு உயிர் தப்பி விடுவார். அவர் கண் மட்டுமே தீ காயத்திலிருந்து தப்பித்திருக்கும். இதனால் ஊர் காரர்கள் அவரை பேய் என்று சொல்லி பயம் காட்டுவார்கள்.
பின்னர் அவர் குணமடைந்து பழைய நிலைக்கு வந்தாலும் அகோர முகத்துடன் எம்ஜிஆர் நடித்ததை ரசிகர்கள் விரும்பவில்லை. இதனால் படம் தோல்வி அடைந்தது. எம்ஜிஆரும் இனி இப்படி நடிக்க கூடாது என்று முடிவு செய்தார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தை ஏ.காசிலிங்கம் இயக்கினார், கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதினார். சி.எஸ்ஜெயராமன் இசை அமைத்தார். எம்ஜிஆருடன் வி.என்.ஜானகி, நம்பியார், வீரப்பா எம்ஜி.சக்கரபாணி உள்ளிட்ட பலர் நடித்தனர்.