உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : பாடலுக்காக உருவான கதை

பிளாஷ்பேக் : பாடலுக்காக உருவான கதை

பல படங்களுக்காக உருவாக்கப்பட்டு படத்தில் பயன்படுத்த முடியாமல்போன 6 பாடல்கள் இளையராஜாவிடம் இருந்தது. ஒரு முறை இளையராஜாவை சந்திக்க சென்றார் ஆர்.சுந்தர்ராஜன். அப்போது என்னிடம் 6 பாடல்கள் இருக்கிறது. அதை வைத்து ஒரு படம் செய்துகொள் என்று எடுத்து கொடுத்தார் இளையராஜா. அந்த பாடல்களுக்காகவே உருவான படம்தான் 'வைதேகி காத்திருந்தாள்'. படமும், பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

இதேபோன்று இன்னொரு சம்பவமும் உண்டு. 50 படங்களுக்கு மேல் இயக்கிய கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய முதல் படம் 'புரியாத புதிர்'. இதனை சூப்பர் குட் ஆர்.பி.சவுத்ரி தயாரித்தார். இதை தொடர்ந்து அடுத்தும் ஒரு படம் இயக்குமாரு ஆர்.பி.சவுத்ரி, கே.எஸ்.ரவிகுமாரை கேட்டுக் கொண்டார். அப்போது ரவிகுமாரிடம் கைவசம் கதை இல்லை. அப்போது சவுத்ரி அலுவலகத்தில் இருந்த ஈரோடு சவுந்தர் ஒரு கதை சொன்னார். அதில் அக்கா - தம்பி மோதல் இருந்தது. இதனை மாற்றி அண்ணன், தம்பி மோதலாக்கி உருவான கதைதான் 'சேரன் பாண்டியன்'.

படத்திற்கு இசை அமைப்பாளர் தேடியபோது அதே அலுவலகத்தில் வாய்ப்பு கேட்டு இசை அமைப்பாளர் சவுந்தர்யனும் வந்திருந்தார். சவுத்ரி, ரவிகுமாரை அழைத்து 'அந்த பையன் ஏதோ சில பாட்டு வச்சிருக்கான் கேளு, பிடிச்சிருந்தா அந்த பையனை யூஸ் பண்ணிக்கோ' என்றார். உடனே சவுந்தர்யனை அழைத்து பாடல்களை கேட்டார்.

'காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா, வந்ததா வசந்தம் வந்ததா' என்று பாடினார். பாடலை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவிகுமார் அவர் கையில் இருந்த எல்லா பாடலையும் பாடச்சொன்னார். 13 பாடல்களை பாடினார் சவுந்தர்யன். அதில் 7 பாடல்களை தேர்வு செய்தார் ரவிகுமார். சவுத்திரியும் அதே பாடல்களை தேர்வு செய்தார்.

அண்ணன்-தம்பி மோதல் பின்பு சேர்தல் என்ற ஒன் லைனை மட்டும் வைத்துக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட 7 பாடல்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையை மாற்றி எழுதினார் ஈரோடு சவுந்தர். படமும் பெரிய வெற்றி பெற்றது. அதில் இடம்பெற்ற காதல் கடிதம் வந்ததா, கண்கள் ஒன்றாக கலந்ததா, சம்பா நாத்து கதிராச்சு... சின்ன தங்கம் என் செல்ல தங்கம் ஏன் கண்ணு கலங்குது உள்ளிட்ட அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !