உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தணிக்கை குழுவிடம் வருத்தம் தெரிவித்த நாகேஷ்

பிளாஷ்பேக் : தணிக்கை குழுவிடம் வருத்தம் தெரிவித்த நாகேஷ்

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையாக இருந்தவர் நாகேஷ். நாயகன், காமெடியன் குணசித்ர நாயகன் என அவர் எடுக்காத அவதாரமே இல்லை. அப்படிப்பட்ட நாகேஷை 'அன்னை இல்லம்' படத்தில் நடித்ததற்காக நேரில் அழைத்து கண்டித்தது தணிக்கை குழு. அது ஏன் என்பதை கடைசியில் பார்க்கலாம்.

சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கியவர் பி.மாதவன். ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த மாதவன் அவர் முதலில் இயக்கிய 'மணியோசை' படம் தோல்வி அடைந்ததால் மிகுந்த சோர்வில் இருந்த அவரை அழைத்து தனது நடிப்பில் ஒரு படம் இயக்குமாறு சொன்னார் சிவாஜி. அந்தப் படம்தான் 'அன்னை இல்லம்'. தனது வீட்டின் பெயரையே படத்திற்கு கொடுத்ததோடு தனது நண்பர் எஸ்.ஆர்.சந்தானத்துடன் இணைந்து தானே படத்தை தயாரித்தார். கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். சிவாஜி கணேசனுடன், தேவிகா, முத்துராமன், எஸ்.வி.ரங்காராவ், எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி, நாகேஷ், ஜெயந்தி, சச்சு, ஓ.ஏ.கே.தேவர் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஒரு காலத்தில், ஊருக்கு வாரி கொடுத்து வள்ளலாக திகழ்ந்த ரங்காராவ், ஒரு கட்டத்தில் ஏழையாகிறார். அவர் மீது கொலைக் குற்றமும் சுமத்தப்படுகிறது. மூத்த மகன் சிவாஜி அவருடனும், இளைய மகன் முத்துராமன், அம்மாவுடன் வாழ்கிறார்கள். நம்பியார் செய்யும் சதியால் தூக்குத் தண்டனை கிடைக்கிறது ரங்காராவுக்கு. அவரைக் காப்பாற்றப் போராடுகிறார் சிவாஜி. இறுதியில் குடும்பம் எப்படி ஒன்றாகிறது என்பது கதை.

கண்ணதாசன் வரிகளில் 'எண்ணிரண்டு பதினாறு வயது, நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது, சிவப்பு விளக்கு எரியுதம்மா, மடி மீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம், போன்ற ஹிட் பாடல்கள் இடம்பெற்றது இந்தப் படத்தில்தான்.

இந்த படத்தில் நாகேஷ் காமெடியனாக நடித்தார். இதில் அவர் திக்குவாய் பிரச்னை கொண்டவராக நடித்தார். அந்த பிரச்னை உள்ளவர்களை கிண்டல் செய்வது போன்று காட்சிகள் அமைந்து விட்டது. அன்றைக்கிருந்த தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு இந்த பிரச்னை இருந்துள்ளது. படத்தை பார்த்த அவர் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். இதனால் நாகேஷ் காட்சிகள் மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்வது போல உள்ளது. எனவே அந்த காட்சிகளை நீக்க வேண்டும், இல்லா விட்டால் நாகேஷ் தணிக்கை குழு முன் நேரில் வந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்கள். நாகேசும் எந்த ஈகோவும் பார்க்காமல் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !