ஸ்ரீதேவியின் சென்னை சொத்து பிரச்சனை : மத்தியஸ்தம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான சென்னை சொத்து தொடர்பாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த பிரச்சனை, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 2.7 ஏக்கர் நிலம் பற்றியதாகும். இந்த சொத்தை ஸ்ரீதேவியும் அவரது குடும்பத்தினரும் 1988-ல் வாங்கினர். ஆனால், அந்த நிலம் தங்கள் பூர்வீகச் சொத்து என்றும், தங்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு விற்பனை பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி இரண்டு உடன்பிறப்புகள் அந்த விற்பனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.
முன்னதாக, இந்த வழக்கை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தைச் சுட்டிக்காட்டியும், இது தேவையற்ற வழக்கு என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். தற்போது உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. சொத்தின் உரிமை, மாற்றம் மற்றும் கட்டுமானப் பணிகள் தொடர்பாக தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அடுத்த விசாரணைக்கு முன்னதாக, மத்தியஸ்தம் மூலம் தீர்வைக் காண முயற்சிக்குமாறு இரு தரப்பினரையும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாட்டை எட்டாவிட்டால், இந்த பிரச்சனை சட்டப்பூர்வ நடவடிக்கை மூலமாகவே தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.