'நந்தன்' 2ம் பாகம் அறிவிப்பு
2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் 'நந்தன்'. இரா.சரவணன் இயக்கிய இந்தப் படத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரகனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இந்த படம் பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா.சரவணன் எழுதி இயக்குகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார்.
நந்தன் இரண்டாம் பாகத்தில் நான் நடிப்பேன் என்று சசிகுமார் பல நேர்காணல்களில் கூறியிருப்பதால் அவர் நடிப்பது உறுதியாகிறது. தற்போதைய நிலையில் 'நந்தன் 2' படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் குறித்த தகவல்கள் மற்றும் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்பான முழுமையான விவரங்கள், அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.
இதுகுறித்து சரவணன் கூறும்போது “'நந்தன் 2' படத்திலும் சமூக அக்கறை கொண்ட மற்றொரு முக்கியமான பிரச்னையை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது. 'நந்தன்' படத்தை விட இன்னும் அழுத்தமான படைப்பாக சமூக அக்கறை மிக்க படைப்பாக இப்படம் இருக்கும்” என்றார்.