வெற்றிகளை விட அன்பு தான் பெரியது: 48வது சினிமா ஆண்டில் சிரஞ்சீவி நெகிழ்ச்சி
ADDED : 14 hours ago
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நேற்றுடன் சினிமாவிற்கு வந்து 48 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 1978ம் ஆண்டு வெளியான 'பிராணம் கரீது' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சிரஞ்சீவி.
இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு சிரஞ்சீவி சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 1978, செப்டம்பர் 22ம் தேதி தொடங்கிய எனது சினிமா பயணம், இன்று 48 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 48 ஆண்டுகளில் நிறைய கதாபாத்திரங்களில் நான் நடித்திருக்கிறேன். பல வெற்றிகளை பார்த்திருக்கிறேன். பற்பல விருதுகள், மரியாதைகளைப் பெற்றுள்ளேன்.
இந்த நீண்ட பயணத்தில் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், என்னுள் இருந்த நடிகனில் இருந்து புதிய பரிணாமங்களைக் கண்டுபிடித்த இயக்குநர்கள், படத்தில் இணைந்து நடித்த சக நடிகர்கள், இரவு பகலாக உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் கூட்டு உழைப்புதான் இன்று நான் இருக்கும் இடத்தை எனக்குப் பெற்றுத் தந்துள்ளது. ஆனாலும் இந்த வெற்றிகளை விட நீங்கள் என் மீது காட்டும் அன்புதான் பெரியது. இந்த எல்லா கவுரவங்களையும் விட உங்கள் இதயத்தில் நீங்கள் தந்திருக்கும் இடம்தான் மதிப்புமிக்கது. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு, என் மீது அளவில்லாத அன்பைப் பொழியும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் என நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்று சிரஞ்சீவி என நான் சூட்டிக் கொண்ட பெயர் உங்களின் அன்பால் என் ஒட்டு மொத்த அடையாளம் ஆகியிருக்கிறது. உங்களின் அன்புக்கும் பாசத்துக்கும் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.