பிளாஷ்பேக் : ரீ ரிலீசில் 100 நாள் ஓடிய சிவாஜி படம்
ஒரு நல்ல படத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தி மறுவெளியீடு செய்யும் வழக்கம் புதியதல்ல. அப்படியான படங்கள் சில ஆச்சர்யப்படத்தக்க நிலையில் பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிகழ்வும் உண்டு. அப்படி சிவாஜி படமான 'இருவர் உள்ளம்' படம் 'புத்தம் புதிய காப்பி' என்ற பெயரில் மறுவெளியீடு செய்யப்பட்டு 100 நாட்கள் வரை ஓடியது.
எல்.வி.பிரசாத் இயக்கத்தில், கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுத, சிவாஜி, சரோஜாதேவி, ரங்காராவ், சந்தியா, டி.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா முதலானோர் நடித்த, படம். எழுத்தாளர் லட்சுமி எழுதிய 'பெண் மனம்' என்ற நாவலின் தழுவல் இது.
ஒரு காலத்தில் தவறு செய்து வாழ்ந்தவர் திருந்தி வாழும்போது இந்த சமுதாயம் அவனை எளிதில் நல்லவனாக ஒத்துக் கொள்வதில்லை. தான் நல்லவனாகி விட்டதை அவன் நிரூபிக்க பெரிய போராட்டம் நடத்த வேண்டும் என்பதுதான் கதையின் மூலக் கரு. பெண் பித்தனாக இருந்த சிவாஜி, சரோஜாதேவியை கண்டதும் காதல் கொண்டு திருந்தி விடுவார். இதை சரோஜாதேவி உள்ளிட்ட யாரும் நம்புவதில்லை. பிறகு எப்படி நம்ப வைக்கிறார் என்பது கதை.
சிவாஜியின் இயல்பான நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம். அதேபோல். ரங்காராவ், எம்.ஆர்.ராதா நடிப்பு அபாரம். இந்தப் படத்தில் சிவாஜியின் அம்மாவாக, ரங்காராவின் மனைவியாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்திருப்பார். எம்.ஆர்.ராதாவின் மனைவி முத்துலட்சுமி, காது கேட்காதவராக நடித்திருப்பார். ஆனால் அதைவைத்து காமெடியெல்லாம் செய்யாமல் கதையை நகர்த்தியிருப்பார் இயக்குநர் எல்.வி.பிரசாத்.
கே.வி.மகாதேவன் இசை. கண்ணதாசன் பாடல்கள். எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம், புத்திசிகாமணி பெத்தபுள்ள, கண்ணெதிரே தோன்றினாள், இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா, அழகு சிரிக்கிறது ஆசை துடிக்கிறது, ஏன் அழுதாய் ஏன் அழுதாய்?, கண்ணே கண்ணே உறங்காதே, நதி எங்கே போகிறது கடலைத்தேடி... என்று அனைத்துப் பாடல்களும் இப்போதும் கேட்க இனிமையாக இருக்கும்.
1963ல் வெளியான இந்தப் படம் 80களில் மீண்டும் வெளியிடப்பட்டு 100 நாட்கள் வரை ஓடியது. பிறகு இரண்டாவது ரவுண்டிலும் பல தியேட்டர்களில் 50 நாள் வரை ஓடியது.