உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஏழு கடல் ஏழு மலை' கதை இதுதான் : ராம் சொல்கிறார்

'ஏழு கடல் ஏழு மலை' கதை இதுதான் : ராம் சொல்கிறார்

ராம் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கிற படம் 'ஏழு கடல் ஏழு மலை'. வருகிற அக்., 1ம் தேதி வெளிவருகிறது. நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி.புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்தின் கதை பற்றி ஏராளமான கதைகள் வெளிவந்தன. தற்போது வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் கதை இதுதான் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார் ராம். இது பேண்டசி கலந்த ஒரு காதல் கதை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ராம் கூறியிருப்பதாவது: இந்த படத்தின் கதை மிக எளிதானது குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது ஏழு கடல் ஏழு கடல் கடந்து நாயகன் தன் காதலியை தேடிச் செல்வான் என்று கூறுவோம். இந்த படத்தின் கதையும் அதுதான்.

திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரம் நிவின் பாலி. படத்தில் அவருக்குப் பெயரே கிடையாது. 4,000 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் சாகாவரம் பெற்றவராக வருகிறார். சாகாவரம் பெற்ற அவரை இயக்குவது, சாகாவரம் பெற்ற அவருடைய காதல்தான். அவர் பல நூற்றாண்டுகளாக ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறார். நிஜ வாழ்க்கையில் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு தீபாவளி இரவில் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத கடைசி பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கிறார். தூக்கத்தில் ஒரு கனவு வர, அதில் அந்தப் பெண் வந்துவிடுகிறாள். மற்றொரு கதாபாத்திரம் சூரி. அவருக்கும் பெயர் கிடையாது. எங்கோ ஒரு பாலைவனத்தில் எட்டு ஆண்டுகளாகத் தன் குடும்பத்துக்காக உழைத்து, பொருளீட்டி இரண்டு சூட்கேஸ் நிறைய பொருள்களையும், மகிழ்ச்சியையும் தூக்கிக்கொண்டு தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்.
ரயில் பெட்டியில் ஏறும் அவர் தூங்கிக் கொண்டிருக்கிற சாகாவரம் பெற்ற வரை எழுப்பிவிடுகிறார். இவர் எழுப்பும்போதுதான் அந்தப் பெண்ணை நிவின் பாலி கனவில் கண்டுபிடித்திருக்கிறார். தூங்கிக் கொண்டிருக்கும் புலியை எழுப்பிய நிலைக்கு ஆளாகிறார் சூரி. இருவருக்கும் இடையில் நடக்கும் பயணம், பேச்சு முரண்தான் தான் கதை. அந்த ரயில் பெட்டியிலுள்ள ஒரு எலி இருவரையும் பிரிக்கிறது, இணைக்கிறது என்பது படத்தின் இன்னொரு சுவாரஸ்யம்.

ஒரு காதலன் தன் காதலியைக் கண்டுபிடித்தானா இல்லையா... சூரி பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்தாரா, இல்லையா. இவர்கள் இடையில் மாட்டிக்கொண்ட எலி என்னவானது... என்பதே 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் கதை சுருக்கம். என்கிறார் ராம்.

தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !