உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவாஜி குடும்பத்திலிருந்து அறிமுகமாகும் 6வது நடிகர்

சிவாஜி குடும்பத்திலிருந்து அறிமுகமாகும் 6வது நடிகர்

தமிழ்த் திரையுலகத்தில் தனது நடிப்பின் மூலம் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்தவர் சிவாஜி கணேசன். அவர் மறைந்தாலும் அவரது படங்களும், அவரது நடிப்பும் இன்றைய தலைமுறையினருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. அவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்தவர்.

அவரது இளைய மகன் பிரபு, 1982ல் வெளிவந்த 'சங்கிலி' படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கெனத் தனி புகழைப் பெற்றார். இப்போதும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பிரபுவின் அண்ணன் ராம்குமார் 1988ல் வெளிவந்த 'அறுவடை நாள்' படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் மட்டும் நடித்தார். “ஐ, எல்கேஜி” ஆகிய படங்களில் அவரது நடிப்பை இன்றைய தலைமுறை ரசிகர்கள் பார்த்திருக்கலாம்.

ராம்குமாரின் மூத்த மகன் துஷ்யந்த் 2003ல் வெளிவந்த 'சக்சஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அடுத்து 'மச்சி, தீர்க்கதரிசி” ஆகிய படங்களில் மட்டும் நடித்தார்.

பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, 2012ல் வெளிவந்த 'கும்கி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கடந்த 13 வருடங்களில் 25 படங்களில் நடித்துவிட்டார். கடந்த வருடம் அவரது 25வது படமாக வெளிவந்த 'சிறை' வெற்றிப் படமாக அமைந்தது. அவர் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ராம்குமாரின் இளைய மகன் தர்ஷன் கணேசன் இன்று வெளியாகியுள்ள 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்க வரும் 6வது நடிகர் இவர். புனேவில் நடிப்புப் பயிற்சி பயின்றவர். தமிழ், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். அறிமுகப் படத்திலேயே அவரது நடிப்பைப் பார்த்தவர்கள் பாராட்டியுள்ளார்கள்.

ராம்குமாரின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த சிவாஜி தேவ் 2008ல் வெளியான 'சிங்கக்குட்டி' படத்தில் நாயகனாக அறிமுகமானார். நடிகை ஸ்ரீபிரியாவின் சகோதரியைத்தான் ராம்குமார் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். அதற்கடுத்து 'புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்து போகும்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டார். நடிகை சுஜா வருணியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !