‛அப்பா குட்டி' பார்த்துவிட்டு அவரவர் அப்பாவுக்கு பேசுவீங்க : ப்ரீத்தி அஸ்ரானி
மு மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‛அப்பா குட்டி'. நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இந்த படத்தின் நிகழ்வில் ப்ரீத்தி அஸ்ரானி பேசியதாவது, “ 'அப்பா குட்டி' திரைப்படம் எனக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் நெருக்கமான படம். இயக்குநர் மு. மாறன் ஒவ்வொரு காட்சியையும் மிகத் தெளிவான பார்வையுடன் உருவாக்கியிருந்தார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. குறிப்பாக, ஒரு மகளாக அப்பாவின் அன்பையும் தியாகத்தையும் உணரக்கூடிய பல தருணங்கள் படத்தில் இருக்கின்றன.
அம்மாவின் அன்பைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் அப்பாக்கள் தங்களுடைய அன்பையும் உணர்வுகளையும் அதிகம் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் நமக்காக செய்யும் தியாகங்களையும் முயற்சிகளையும் நாம் பல நேரங்களில் கவனிப்பதில்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பலரும் தங்களுடைய அப்பாவுக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவார்கள் என்று நம்புகிறேன்.
என்னுடைய கதாபாத்திரம் வயதில் இளமையாக இருந்தாலும், மிகவும் முதிர்ச்சியான சிந்தனைகளைக் கொண்டது. விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நடிகர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், தயாரிப்பாளர் எனப் பல பொறுப்புகளை ஏற்றிருந்தாலும், மிகவும் எளிமையாகவும் சக நடிகர்களுக்கு உரிய சுதந்திரம் கொடுத்தும் பணியாற்றினார். அவரது கதைத்தேர்வு, தொழில்முறை அணுகுமுறை மற்றும் பணிவு ஆகியவை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.
இந்தப் படம் அப்பா - மகள் உறவை மட்டும் பேசும் வழக்கமான உணர்வுபூர்வமான படமாக இருக்காது. இதில் வித்தியாசமான கதைக்களம், வணிக அம்சங்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என அனைத்தும் கலந்திருக்கின்றன. நவம்பர் 20ம் தேதி வெளியாகும் 'அப்பா குட்டி' படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தர வேண்டும்” என்றார்.