பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார்
'புலிமுருகன், போக்கிரி ராஜா, நரசிம்மம், நரன், தொடரும், ஒடியன்' போன்ற 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஷாஜி குமார். தற்போது நடிகர் திலீப் நடித்து வரம் புதிய படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். ஆலப்புழாவில் நடந்த இதன் படப்பிடிப்பின்போது ஷாஜி குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்பு அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று (நவ.,10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் தமிழில் நடிகர் பிரசாந்த் நடித்த 'பொன்னர் சங்கர், மம்பட்டியான், சாகசம்' ஆகிய படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.