'ராமாயணா' படத்தில் பணிபுரிந்த நீலகிரி கலைஞர்கள்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடித்து தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளிவந்த 'ராமாயணா' படம் 600 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தில் நீலகிரி மலைப் பகுதியைச் சேர்ந்த மூன்று கலைஞர்கள் அவர்களது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றனர். இது குறித்த தகவலை அப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு இணை எழுத்தாளர், உதவி டப்பிங் இயக்குனராகப் பணிபுரிந்துள்ள கவுசல்யா அவரது முகப் புத்தகத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.
“ஹெத்தை ஐயா ஆசியுடன், நீலகிரி மலையைச் சேர்ந்த மூன்று படுகர்கள் 'ராமாயணா' படத்தில் பணி புரிந்திருக்கிறோம் எனக் குறிப்பிட்டு, “நீலகிரியிலுள்ள 400 கிராமங்களைச் சொந்தமாகக் கொண்ட, 2 முதல் 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இன்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களில் மூவர், இந்த பிரமாண்டமான திட்டத்தில் வெவ்வேறு பொறுப்புகளில் தற்போது பணியாற்றியுள்ளனர்,” என்று பதிவிட்டுள்ளார்.
'ராமாயணா' படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான டிஎன்இஜி.,யில் தயாரிப்பு மற்றும் டெக்னிக்கல் சப்போர்ட் ஆக இருக்கும் அக்ஷய் ஆகியோர் மற்ற இருவர்.
'ராமாயணா' படத்தின் தமிழ் டப்பிங் ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. ஏஐ மூலம் உதட்டசைவை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றபடி அருமையாக மாற்றியுள்ளனர். அதற்கான வசனங்களை கவுசல்யா இணைந்து எழுதியுள்ளார்.