உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஹீரோ கிடைக்காமல் கைவிடப்பட இருந்த 'இதயம்'

பிளாஷ்பேக் : ஹீரோ கிடைக்காமல் கைவிடப்பட இருந்த 'இதயம்'

முரளி நடித்த பிளாக் பஸ்டர் படம் 'இதயம்'. இன்றைக்கு சொல்லப்படாத காதலுக்காக உதாரணமாக சொல்லப்பட்டு வருகிற படம். கிராமத்திலிருந்து மருத்துவம் படிக்க வருகிற முரளிக்கு உடன் படிக்கிற ஹீரா மீது காதல். ஆனால் கிராமத்து வெட்கம், தயக்கம் அவருக்கு. ஹீரா அவரது காதலை உணர்ந்து தன் காதலை சொல்ல செல்லும்போது சொல்ல முடியாத ஒரு சூழல். இப்படி ஒரு காதலை உருக உருக சொன்ன படம் இதயம். வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது.

சத்யஜோதி பிலிம்சில் டிசைனராக பணியாற்றி வந்தவர் கதிர். அவருக்கு இயக்குநராகும் ஆசை வந்தது. தன் ஆசையை அவர் சத்யஜோதி தியாகராஜனிடம் சொன்னபோது 'சரி ஒரு கதையை எழுதிவிட்டு வா' என்றார். கதையை எழுதி அவரிடம் சொன்னபோது. 'கதை பிரமாதமாக இருக்கிறது. ஆனால் இதில் புதுமுகங்கள்தான் நடிக்க வேண்டும்' என்று கூறிவிட்டார். இயக்குனர் கதிர் பல ஆடிசன்கள் நடத்தி பல இடத்தில் தேடி ஹீரோ கிடைக்கவில்லை. கிராமத்து நாயகன் என்பதால் கருப்பாக இருக்க வேண்டும். பார்த்த உடன் பிடிக்கிற முகமாக இருக்க வேண்டும். புன்னகையோடு வெட்கத்தை வெளிப்படுத்துகிற முகமாக இருக்க வேண்டும். இத்தனை அம்சங்களோடு ஹீரோ கிடைக்கவில்லை.

அப்போது காதிகிராப் விளம்பரத்திற்கு போஸ் கொடுத்திருந்த ஹீராவை அணுகி நடிக்க கேட்டபபோது அவர் குடும்பம் மறுத்து விட்டது. படத்தில் காதல் இல்லை. டூயட் இல்லை நாயகனும் நாயகியம் தொட்டுக்கொள்ளகூட மாட்டார்கள் என்று சொல்லி சம்பதம் வாங்கி வைத்திருந்தார் கதிர்.

கடைசி வரை ஹீரோ கிடைக்கவில்லை. நேராக தியாகராஜனிடம் சென்று 'ஹீரோ கிடைக்கவில்லை சார் படத்தை விட்டு விடலாம் நான் வேறு கதை எழுதி வருகிறேன்' என்றார். அப்போது தியாகராஜன் 'முரளின்னு ஒரு கன்னடத்து பையன் வந்திருக்கான். அவன் சரியா இருப்பான்னு நினைக்கிறேன் போய் பார்த்து வாருங்கள்' என்று அனுப்பி வைத்தார். முரளியை கண்டதுமே தனக்கான ஹீரோ இவர்தான் என்று முடிவு செய்தார். கதையை கேட்ட முரளி சம்மதித்தார். இதயம் உருவானது. காதல் மட்டுமல்ல காதல் படமும் தனக்கான ஜோடியை தேடிக்கண்டுபிடித்து விடும் என்பது இதுதானோ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !