உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயன் படம் பற்றி கங்கை அமரன் கருத்து: முற்றுப்புள்ளி வைத்த வெங்கட்பிரபு

சிவகார்த்திகேயன் படம் பற்றி கங்கை அமரன் கருத்து: முற்றுப்புள்ளி வைத்த வெங்கட்பிரபு


இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த 'தி கோட்' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு, வெங்கட்பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணியில் ஒரு படம் பேச்சுவார்த்தையில் இருந்து வந்தது. அதற்கான பணிகளிலும் வெங்கட்பிரபு ஈடுபட்டு வந்தார். ஆனால், சிவகார்த்திகேயன், 'சேயோன்' படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அடுத்ததாக 'பார்க்கிங்' இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 27வது படத்தில் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. இதனால், வெங்கட்பிரபு உடனான படம் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையே வெங்கட்பிரபுவின் தந்தை கங்கை அமரன் அளித்த ஒரு பேட்டியில், ''வெங்கட்பிரபு வளர்ச்சியைப் பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. நல்ல ஐடியா உள்ளது. நல்ல வளர்ச்சி உள்ளது. அவன் வேறு ஒரு படத்திற்கு நம்பி இருந்ததால் அந்த படம் தாமதம் ஆனதால் ஒரு படம் தாமதமாகிவிட்டது. அந்த நடிகர் யாரென்று குற்றம், குறை சொல்ல வேண்டாம். அவர்கள் வாழட்டும்.

முதலில் கால்ஷீட் கொடுத்தார். இவர்கள் கதை எல்லாம் தயார் பண்ணி, அமெரிக்கா சென்று அதற்கு பண்ண வேண்டிய வேலை எல்லாம் பண்ணிவிட்டு வந்துவிட்டார்கள். அந்த நடிகர் ஒரு படம் பண்ணார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டது. அந்த நடிகர் இந்த இயக்குனரோட இரண்டு படங்கள் பண்ணிவிட்டுதான் அதற்கு அடுத்து வேறு படம் பண்ணுவேன் என்றார்.

அதற்கு முன்பு வெங்கட்பிரபு இயக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். நான் வெங்கட் பிரபுவிடம் கேட்டேன் இது உனக்குத் தேவையா? இதுக்கு மேலே நீ அவன் கால்ல விழுந்து நடிக்கனுமா? எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் நம்ம குடும்பத்திற்கு அவமானம் இல்லையா? உன் கதை அவனுக்கு சரியா வரும். உன்னை அவன் தவிர்க்கும்போது நீ அவனை தவிர்த்துவிடு. அவன் படம் பண்ணக்கூடாது. அது எந்த நடிகர் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்'' எனப் பெயரை குறிப்பிடாமல் பேசியிருந்தார். அவர் சிவகார்த்திகேயனை தான் குறிப்பிடுகிறார் என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

வெங்கட்பிரபு

இந்த நிலையில், வெங்கட்பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சிவகார்த்திகேயன் எப்போதும் என் அன்பான நண்பர் மற்றும் சகோதரர் போன்றவர். இது குறித்து (படம் கைவிடப்பட்டது குறித்து) பலவிதமான யூகங்களும் சர்ச்சைகளும் நிலவி வருகின்றன. ஒரு தந்தையாக, தனது சொந்த மகன் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படம் தாமதமாகும் போது ஏற்படும் விரக்தி இயல்பானதுதான். அவருக்கு முழுமையான சூழல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; அதற்காக நான் அவரைக் குறை சொல்ல முடியாது.

என் வேலையைப் பொறுத்தவரை நான் மிகவும் அமைதியான ஒரு நபர்; தொழில் சார்ந்த விஷயங்களை அவர் உட்பட யாரிடமும் நான் விரிவாகப் பேசுவதில்லை. பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டத்தைத் தொடங்க முடியாமல் போனது. அவ்வளவுதான். இதில் எந்த மனக்கசப்பும் இல்லை. சரியான நேரமும், ஒரு நல்ல கதைக்களமும் அமைந்தால், சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற பெரிதும் விரும்புகிறேன். எனவே தயவுசெய்து, இவை அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.

நான் எனது அடுத்தடுத்த பணிகளில் மும்முரமாக இருக்கிறேன். என் சகோதரர் போன்ற சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் பதில்

இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்: சார், நாம ஒரு குடும்பம் மாதிரி. இதுக்கெல்லாம் போய் நீங்க ரொம்ப சீரியஸா ரிப்ளை பண்ணிட்டு இருக்கீங்க! உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார்; உங்கள் அடுத்த ப்ராஜெக்ட்டுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இதை நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன் - நான் எப்போதும் உங்கள் (வெங்கட்பிரபு) ரசிகராகவே இருப்பேன். விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் பதில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !