'பத்தா' : விஜய் சேதுபதிக்குக் காத்திருக்கும் சவால்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள், கதாபாத்திரங்கள் என தனக்கென தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டுள்ளவர் விஜய் சேதுபதி. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருக்கிறார்.
இந்த 2026ம் ஆண்டில் அவர் நடித்து வெளிவந்த 'காந்தி டாக்ஸ்' படம் மவுனப் படமாக வெளிவந்தது. ஆனால், படம் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை. இந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடித்து அடுத்த சில வாரங்களில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன.
நாளை அக்டோபர் 1ம் தேதி அவரது நடிப்பில் 'பத்தா' படம் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி' ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
'பத்தா' படம் விஜய் சேதுபதிக்கு ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில் அவர் தொகுத்து வழங்கி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அவர் பேசும் சில 'பன்ச்' உரைகள் விஜய் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது. அவர் முதல்வர் விஜய்யைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசுவதாக கொந்தளித்துள்ளனர். சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போது படத்தின் தயாரிப்பாளரான அட்லி, விஜய்யைப் புகழ்ந்தும், அவருக்கு ஆதரவாகப் பேசியதும் விஜய்யின் எதிர்ப்பாளர்களை கோபப்பட வைத்தது.
விஜய்யை விஜய் சேதுபதி மறைமுகமாக விமர்சித்ததற்காக விஜய் ஆதரவாளர்களும், விஜய்யை வானளவாப் புகழ்ந்து பேசிய தயாரிப்பாளர் அட்லிக்கு எதிராக விஜய் எதிர்ப்பாளர்களும் 'பத்தா' படத்திற்காகக் காத்திருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் 'பத்தா' என்ன மாதிரியான ஆதரவையும், எதிர்ப்பையும், டிரோல்களையும் உருவாக்கப் போகிறது என்பது நாளை இந்த நேரத்தில் தெரிந்துவிடும்.
இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியின் 'டிரைன், ஸ்லம்டாக் - 33 டெம்பிள் ரோடு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. 'பத்தா'வின் ரிசல்ட் இந்தப் படங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.