பிளாஷ்பேக்: திடீர் நடிகராகி இயக்குனர் வாய்ப்பை இழந்தவர்
தற்போது காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வரும் சி.ரங்கநாதனை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் 3 வெற்றிப்படங்களை இயக்கிய தரமான இயக்குனர். விஜய் நடித்த 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை', பார்த்திபன், ரச்சனா பானர்ஜி நடித்த 'டாடா பிர்லா', ராம்கி, சங்கவி நடித்த 'ஆஹா என்ன பொருத்தம்' படங்களை இயக்கினார். மூன்றுமே ஓரளவிற்கு வெற்றிப் படங்கள்தான்.
அன்றைக்கிருந்த பார்த்திபன், பாண்டியராஜன் போன்று இவருக்கும் நடிக்கும் ஆசை வந்தது. 'ஒயிலாட்டம்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். இதனை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார், தேவா இசை அமைத்தார். ஷர்மிளா, ராதாரவி, அனுமோகன், ஆர்.சுந்தர்ராஜன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க வேண்டும் என்று அணுகியபோது தனது பிசியான ஷெட்யூல் காரணமாக அவர் மறுத்து விட்டார். தேவாவின் பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் படம் பெரும் தோல்வி அடைந்தது. அதன்பிறகு ரங்கநாதனுக்கு படம் இயக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் முழுநேர நடிகரானார்.