நிறைவேறாமல் போன சிங்கீதம் சீனிவாச ராவின் கடைசி படம் : நாக் அஸ்வின் தகவல்
தென்னிந்திய சினிமாவில் 94 வயதான சீனியர் இயக்குனரான சிங்கீதம் சீனிவாச ராவ் சமீபத்தில் காலமானார். தமிழில் கமல்ஹாசனை வைத்து 'பேசும் படம்', 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்' என அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக அறியப்பட்டவர் இவர். சில மாதங்களுக்கு முன்பு கூட இவர் கடைசியாக இயக்கிய 'சிங் கீதம்' என்கிற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் தயாரித்திருந்தார்.
தற்போது சிங்கீதம் சீனிவாச ராவின் மறைவு குறித்து அவர் பேசும்போது, 94 வயதிலும் சினிமா மீதும் புதிய கதைகளை உருவாக்குவதிலும் அவர் ஆர்வம் காட்டியதுடன், தனது அடுத்த படத்திற்கான திட்டமிடலில் அவர் இருந்தார். அப்படத்திற்கு 'ப்ரூட் கட்ஸ் தி நைப்' (Fruit Cuts the knife) என வித்தியாசமான டைட்டிலையும் அவர் திட்டமிட்டு அதை எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார் என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் நாக் அஸ்வின்.. அந்த வகையில் இன்னொரு படத்தையும் இயக்க திட்டமிட்டிருந்த சிங்கீதம் சீனிவாச ராவ், அது முழுமை பெறாமலேயே காலமானார் என்பது வருத்தத்திற்குரியது.