விளம்பர நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்ததில் காயமின்றி தப்பினார் சிவராஜ்குமார்
கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம், சமீபத்தில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் நடைபெற்ற ஒரு தனியார் ஷோரூம் திறப்பு விழா மற்றும் தன்னுடைய படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவராஜ்குமார் வருகை தந்திருந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக ரசிகர்கள் உற்சாகமாக ஏராளமான பட்டாசுகளை வெடித்து வரவேற்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிப் பட்டாசு திடீரென வெடித்துச் சிதறி, தீப்பொறிகளும் புகையும் அவரை நோக்கிப் பாய்ந்தன. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. எனினும், அதிர்ஷ்டவசமாக சிவராஜ்குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினார். ஆரம்பத்தில் சற்று அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் சுதாரித்துக்கொண்ட சிவராஜ்குமார் பாதுகாப்பாக அங்கிருந்து விலகி, பின்னர் அமைதியான முறையில் ரசிகர்களைச் சந்தித்து உரையாடினார். இது குறித்த வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.