உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 : 'புலி'யை எதிர்க்கப் போகும் 'எலி'கள் யார் யார்

ஜெயிலர் 2 : 'புலி'யை எதிர்க்கப் போகும் 'எலி'கள் யார் யார்

தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். வெளிநாடுகளில் தமிழ் சினிமாவுக்கென தனி மார்க்கெட் உருவாக முதன்மையானவரும், முக்கியமானவரும் அவர்தான். அவரது படங்கள் போட்டுத் தந்த பாதையில்தான் இன்று வரை தமிழ் சினிமாவின் இதர நடிகர்கள், படங்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இத்தனை வயதிலும் ரசிகர்களை தனது படங்கள் மூலம் ரசிக்க வைக்கும் ரஜினிகாந்த்தை இன்றைய குழந்தைகள் கூட ஆர்ப்பரித்து ரசிக்கிறார்கள். அவரது அடுத்த வெளியீடாக அடுத்த வாரம் அக்டோபர் 15ம் தேதி 'ஜெயிலர் 2' படம் வெளியாக உள்ளது.

டிரைலர் தந்த எதிர்பார்ப்பு

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. டிரைலரைப் பார்த்ததுமே, ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் பற்றி ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் எழுந்துள்ளது. இப்படத்தின் மூலம் அவருடன் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளவர்களும் இருக்கிறார்கள்.

டிரைலர் வெளியானதில் இருந்தே அவர்கள் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள், ரஜினியுடன் அவர்களுடைய காட்சி நேரம் எவ்வளவு இருக்கும் என்பது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

2023ல் வெளியான 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த்துடன் வசந்த் ரவி, மிர்ணா, வினாயகன், சுனில் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களிலும், சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ஒரு பாடலுக்கு நடனமாடிய தமன்னா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார்கள்.

'ஜெயிலர் 2' படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்ஜே சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் ரஜினியுடன் முதல் முறை இணைந்து நடித்துள்ளார்கள்.

சுராஜ்

மலையாளத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரவேற்பைப் பெற்றவரும், தேசிய விருது வென்ற நடிகரும், தமிழில், 'வீர தீர சூரன், யூத், கர' ஆகிய படங்களில் நடித்துள்ள சுராஜ் வெஞ்சாரமூடு, 'ஜெயிலர் 2' படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். அவரது தோற்றமும், பேச்சும், நடிப்பும் ரஜினிக்கு 'டப்' கொடுக்கும் வில்லனாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளிவந்த பின்பு, 'ஜெயிலர்' படத்தில் முக்கிய வில்லனாக நடித்த வினாயகன் நடிப்பு சிறப்பாக இருந்ததா, 'ஜெயிலர் 2' படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ள சுராஜ் நடிப்பு சிறப்பாக இருந்ததா என்ற ஒப்பீடு நிச்சயம் வரும்.

எஸ்ஜே சூர்யா

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வரும் எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனத் தெரிகிறது. வழக்கமான எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் இருக்க மாட்டார் என நம்பலாம். அவரை அடக்கி நடிக்க வைத்திருப்பார் நெல்சன் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வித்யா பாலன்

டிரைலரில் சர்ப்ரைஸ் ஆக இருக்கும் 'என்ட்ரி' வித்யா பாலன். ஒரு காலத்தில் தமிழ்ப் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்க வேண்டியவர். பின் ஹிந்தியில் அறிமுகமாகி அங்கு விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தேசிய விருதையும் வென்றவர். அஜித் நடித்து 2019ல் வெளிவந்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் 'ஜெயிலர் 2' மூலம் நடித்துள்ளார்.

மிதுன் சக்கரவர்த்தி

80களில் ஹிந்தித் திரையுலகை தனது இளமையான நடிப்பால், குறிப்பாக பெண் ரசிகைகளை அதிகம் கவர்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. 1982ல் அவர் நடித்து வெளிவந்த ஹிந்திப் படமான 'டிஸ்கோ டான்சர்' மொழி எல்லைகளைக் கடந்து அதிகம் ரசிக்கப்பட்ட படமாக இருந்தது. ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அந்தப் படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

2015ல் தமிழில் வெளிவந்த 'யாகவாராயிலும் நா காக்க' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 'ஜெயிலர் 2' படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார்.

சஸ்பென்ஸ் நடிகர்

டிரைலரில் நீடிக்கும் ஒரு 'சஸ்பென்ஸ் நடிகர்' யார் என்பது யூகங்களாக போய்க் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடித்து 1986ல் வெளிவந்த ஹிந்திப் படமான 'பகவான் தாதா' படத்தில் சிறுவனாக நடித்த, இப்போதைய முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தான் அந்த 'சஸ்பென்ஸ் நடிகர்' என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். 40 வருடங்களுக்குப் பிறகான திரைப் பகிர்வாக அது இருக்கும். சீக்கிரமே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.

'ஜெயிலர்' படத்தில் கண்ணுக்குத் தெரிந்த எதிரியான வில்லன் வர்மன்-ஐ எதிர்த்தார் 'டைகர்' முத்துவேல் பாண்டியன். வர்மனை முத்துவேல் பாண்டியன் கொல்வதற்கு முன்பாக, “என்னைக் கொன்னுடலாம், ஆனா, எனக்குப் பின்னாடி இன்னும் நிறைய பேர் இருக்காங்க,” என்று சொல்வார்.

அந்த “இன்னும் நிறைய பேர்” யார் யார் என்பதைத் தெரிந்து கொள்ள 'ஜெயிலர் 2' வெளியாகும் அக்டோபர் 15ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

'புலி'--ஐ எதிர்க்கப் போகும், அந்த 'எலி'--கள், எவ்வளவு குடைச்சல் கொடுக்கப் போகிறார்கள் என்பதுதான் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !