ஒரே மேடையில் விஜய், பவன் கல்யாண்?
திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று முதல்வர், துணை முதல்வர் என சாதித்தவர்கள் இருக்கிறார்கள். நிகழ்கால அரசியலில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் தமிழக முதல்வராக விஜய், ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாண் ஆகியோர் இருக்கிறார்கள்.
விஜய் போட்டியிட்ட முதல் சட்டசபைத் தேர்தலிலேயே பெருவாரியான வாக்குகள் பெற்று தமிழக முதல்வராகப் பதவியேற்ற பெருமையை விஜய் வைத்துள்ளார். பவன் கல்யாண் முதல் முறை போட்டியில் தோல்வியை சந்தித்தவர். இரண்டாவது முறை போட்டியிட்டு வென்று துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரில் விஜயவாடா உத்சவ் என்ற பெயரில் தசரா நவராத்திரி விழாவைக் கொண்டாட உள்ளார்கள். இதற்காக ஆந்திர மாநில பிரதிநிதிகள் சிலர் நேற்று தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து இந்த விழாவிற்கு வருகை தருமாறு அழைத்துள்ளனர்.
அக்டோபர் 11 முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். மற்ற மாநில முதல்வர்கள், அரசியல் பிரபலங்கள் ஆகியோருக்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விஜய் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தால், ஒரே மேடையில் அவரும் பவன் கல்யாணும் பங்கேற்கும் நிகழ்வு நடக்கலாம். விஜய் கலந்து கொள்வாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.