‛தமிழக எழுச்சிக் கழகம்' பெயரில் கட்சி துவங்குகிறாரா தனுஷ்...?
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்று முதல்வராக விஜய் தலைமையிலான ஆட்சி அமைத்தபின், தமிழகத்தில் சில நடிகர்கள் தங்கள் ரசிகர் மன்ற பணிகளை வேகப்படுத்துகிறார்கள். சில நடிகர்கள் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்துகிறார்கள். புது உறுப்பினர் சேர்க்கை, புது மன்றங்கள், நிர்வாகிகள் தேர்வு என்பதில் ஆர்வம் காண்கிறார்கள். இதில் நடிகர் தனுஷ் முன்னணியில் இருக்கிறார். விரைவில் அவர் தனது ரசிகர் மன்றத்தை விஜய், விஜயகாந்த் பணியில் அரசியல் கட்சியாக மாற்றப் போகிறார் என கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக இதற்கான பணிகள் வேகம் எடுத்து இருக்கின்றன. இந்நிலையில் ‛தமிழக எழுச்சிக் கழகம்' என்ற பெயரில் அவர் கட்சி ஆரம்பிக்க போகிறாராம். இதற்காக டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி கட்சியை பதிவு செய்யும் வேலைகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சி பெயர் உறுதியானதும் அடுத்த கட்டமாக கட்சிக்கொடி, கொள்கைகள், நிர்வாகிகள் தேர்வு கட்டமைப்பு மாநாடு என அடுத்தடுத்த பணிகளை தொடங்க உள்ளார். அநேகமாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பின் அவர் கட்சியை தொடங்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கு ஏற்ப தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தனுஷ் ரசிகர் மன்ற கூட்டங்களும் பெரிய அளவில் நடத்த ஏற்பாடு நடக்கின்றன. டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனுஷ் ரசிகர் மன்றத்தில் இணைய உறுப்பினர் சேர்க்கையும் துவங்கி உள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டா பக்கங்களில் பல்வேறு ஊர்களில் இணைவதற்கான அறிவிப்புகள் உள்ளன.
இது குறித்து தனுஷ் தரப்பில் கேட்டால் அவர்கள் மறுக்கின்றனர். அப்படி எந்த பெயரையும் நாங்கள் தேர்தல் ஆணையத்தில் பதியவில்லை என்கிறார்கள். இருந்தாலும் தனுஷ் மனதில் அரசியல் ஆசை இருக்கிறது. 2031 தேர்தலில் அவர் கண்டிப்பாக களமிறங்குவார் என்கிறார்கள். இதுவரை அவர் எந்த இடத்திலும் எந்த பேட்டியிலும் நான் அரசியலுக்கு வரவே மாட்டேன், கட்சி தொடங்கவே மாட்டேன் என கூறவில்லை, ஆகவே அவருக்குள்ளும் கோட்டை பிடிக்கிற ஆசை இருக்கிறது.
தனுஷை தவிர லெஜன்ட் சரவணன் கட்சி தொடங்க ஆர்வமாக இருக்கிறார். அவரும் சமீபகாலமாக தனது ரசிகர் மன்ற பணிகளை வேகப்படுத்தி வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மினி அரசியல் மாநாடு போன்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பை நடத்தியுள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை பேசி உள்ளார். அவரும் சினிமா பாணியில் அரசியலில் தனுசுக்கு போட்டியாக வருவாரா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.