உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொம்மலாட்டம் படத்தில் சண்டை, பிரச்னைகள் : நானா படேகர் குறித்து பாரதிராஜா சொன்ன வார்த்தை

பொம்மலாட்டம் படத்தில் சண்டை, பிரச்னைகள் : நானா படேகர் குறித்து பாரதிராஜா சொன்ன வார்த்தை

பிரபல நடிகர் நானா படேகர் இன்று கோவாவில் மாரடைப்பால் காலமானார். ஹிந்தி, மராட்டிய மொழிகளில் அதிக படங்களில் நடித்த நானா படேகர் தமிழில் பொம்மலாட்டம், காலா என 2 படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார். பொம்மலாட்டம் படத்தை இயக்கியவர் பாரதிராஜா. தனது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு கிரைம் திரில்லர் களத்தில் பாரதிராஜா இயக்கிய படம் அது.

இதில் சினிமா இயக்குனராக நானா படேகர் வருவார். அவர் படப்பிடிப்பில் சில கொலைகள் நடக்கும். அதை கண்டுபிடிக்கும் வேடத்தில் அர்ஜூன் இருப்பார். கடைசியில் அந்த பட ஹீரோயின் ருக்மினியும் ஒரு கார் விபத்தில் இறப்பார். நானா படேகர் மீது அர்ஜூனுக்கு மேலும் சந்தேகம் வரும், கடைசியில் அந்த ஹீரோயினாக வரும் ருக்மணி பெண்ணே அல்ல. அவர் ஒர ஆண். அவரின் நடன திறமை பார்த்து தனது படத்தில் அவரை ஹீரோயின் ஆக்குவார் நானா படேகர். படப்பிடிப்பு தளத்தில் இந்த உண்மை தெரியபவர்களை, அந்த ஹீரோயினிடம் தவறாக நடப்பவர்களை நானா படேகர் கொல்வார் என்ற ரீதியில் கதை செல்லும்.

ஹிந்தி தெரியாத பாரதிராஜா, தமிழ் தெரியாத நானா படேகரை வைத்து இந்த படத்தை இயக்கினார். படப்பிடிப்பு தளத்தில் நானா படேகர், பாரதிராஜா இடையே நிறைய கருத்து வேறுபாடுகள், சண்டைகள் வந்தன. படப்பிடிப்பும் தாமதம் ஆனது. அந்த சமயத்தில் அவர்களை சமாதானப்படுத்தியவர் நடிகர் அர்ஜூன். ஆனாலும், நானா படேகரை பற்றி ஒரு இடத்திலும் பாரதிராஜா தவறாக பேசியது இல்லை. எந்த பேட்டியிலும் குறைத்து மதிப்பிட்டது இல்லை. அவன் சிறந்த கலைஞன், நல்ல நடிகன்யா என்று தான் பாரதிராஜா பாராட்டினார்.

அந்த படத்தில் நானா படேகருக்கு தமிழில் டப்பிங் பேசியவர் நிழல்கள் ரவி. ஒரு கன்னட படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். அந்த பழக்கத்தில் இருவர் வாய்ஸ் ஒரே மாதிரி இருந்ததால் பொம்மலாட்டம் படத்தில் நிழல்கள் ரவிக்கு டப்பிங் பேச வாய்ப்பு கிடைத்தது. தன் கேரக்டருக்கு சரியாக டப்பிங் பேசிய நிழல்கள் ரவியை பாராட்டியிருக்கிறார் நானா படேகர்.

பொம்மலாட்டம் படப்பிடிப்பில் நடித்த நானா படேகர் காமெடியன் விவேக் திறமையையும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். தமிழில் அவருக்கு பிடித்த நடிகர்களின் விவேக் ஒருவர். ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் ஹரி என்ற அரசியல்வாதியாக, வில்லனாக நடித்தார் நானா படேகர். அந்த படத்தில் அவரே மும்பையில் டப்பிங் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் காலா படத்தில் வில்லனாக நடிக்க நானா படேகர் தயங்கி உள்ளார். ரஜினி இருக்கும்போது தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்குமா என யோசித்து இருக்கிறார். ரஜினிகாந்த் நேரில் சென்று கதை கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நானா படேகர் தயங்கியபோது, ரஜினிகாந்த் அவரிடம் மிகவும் அடக்கமாக, நீங்கள் திரையில் நடிக்கும் போது உங்களது நடிப்புத் திறமையால் மக்கள் உங்களைத்தான் பார்ப்பார்கள், யாரும் என்னை கவனிக்க மாட்டார்கள் என்று கூறி அவரைச் சம்மதிக்க வைத்துள்ளார்.

இரண்டே படங்களில் நடித்தாலும் நானா படேகரை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துபோனது. சமீபகாலமாக ஒரு குபீர் சிரிப்பு மீம் மெட்டிரியலில் நானா படேகர் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. வெல்கம் என்ற ஹிந்தி படத்தில் உதய் ஷெட்டி என்ற கேரக்டரில் நானா படேகர் டான் ஆக நடித்தார். அந்த படத்தில் அவர் காபி குடித்தபடி சிரிக்கும் அந்த போட்டோவை கிண்டல் அடிக்கும் மீம்சில் அதிகம் பயன்படுத்தினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !