'ராமாயணா' தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமானவரி சோதனை
பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் 'ராமாயணா'. இதனை நமித் மல்ஹோத்ரா தயாரிக்கிறார், இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள இந்த படத்தை நிதேஷ் திவாரி இயக்குகிறார். ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், சன்னி தியோல் ஹனுமனாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாலிவுட்டை சேர்ந்த ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசை அமைக்கின்றனர். இதன் முதல் பாகம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. 2வது பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமாயணா இருபாகங்களும் சேர்த்து 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. தற்போது படத்தின் உரிமங்கள் விற்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் ஹிந்தி தியேட்டர் விநியோக உரிமையை தர்மா புரொடக்ஷன்ஸ் சுமார் 250 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் வெளிநாட்டு பண பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து மும்பையில் 'ராமாயணா' படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் போக்கஸ் நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது. இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.