யோகி பாபுவின் 'சிங்காரம்' அக்டோபர் 30ம் தேதி ரிலீஸ்
'ராஜவம்சம்' படத்தை இயக்கிய கே.வி.கதிர்வேலு இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த திரைப்படம் 'சிங்காரம்'. இந்த படத்தில் கதையின் நாயகனாக யோகிபாபு வருகிறார். வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மரிய வின்சென்ட், சாம்ஸ், ஆர்த்தி கணேஷ், மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த யோகிபாபு, தனக்கு எதிராக நிலவும் அடக்குமுறைகளையும் வாழ்க்கைச் சவால்களையும் எதிர்கொண்டு, தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் துணிச்சலைப் பெறுவதே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. தனது உரிமையையும் சுயமரியாதையையும் நிலைநாட்டப் போராடும் ஒரு மனிதனின் பயணத்தை, நகைச்சுவையும் உணர்வுபூர்வமான தருணங்களும் இணைந்த திரைக்கதையின் வழியாக இப்படம் எடுத்துரைக்கிறது. அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவற்றைக் கடந்து முன்னேறுவதற்கான மன உறுதியையும் மையப்படுத்தி இந்த படம் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். இம்மாதம் அக்டோபர் 30ம் தேதி படம் வெளியாகிறது.