'சிக்னல் அட் 11:30' கதையை கேட்டதும் ஓகே சொன்னேன்: நடிகை புஜிதா பொன்னாடா
மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில் உருவாகும் படம் 'சிக்னல் அட் 11:30'. அக்டோபர் 30ம் தேதி படம் ரிலீஸ். சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து பேசியுள்ள ஹீரோயின் புஜிதா, தனது திரைப்பயணத்தில் இந்த படம் முக்கியமான மைல்கல் என்கிறார் புஜிதா. ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பிறந்த புஜிதா, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வளர்ந்தார். கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட குடும்பச் சூழலில் வளர்ந்த புஜிதா, சென்னையில் கணினி அறிவியல் பொறியியல் படிப்பை முடித்தார். பின்னர் ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.
'பரிச்சயம்' என்ற குறும்படத்தின் மூலம் தெலுங்கில் பிரபல இயக்குநர் சுகுமாரின் கவனத்தை ஈர்த்தார். சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவான 'தர்ஷகுடு' திரைப்படத்தில் நடிக்கத் தேர்வானார். தொடர்ந்து ராம் சரண் நடித்த 'ரங்கஸ்தலம்' படத்திலும் ஆடிஷன் மூலம் தேர்வாகி நடித்தார். நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்த நிலையில், மென்பொருள் பொறியாளர் பணியிலிருந்து விலகி, முழுநேரமாக சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்தார் புஜிதா. இதுவரை சுமார் 25 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
'சிக்னல் அட் 11:30' திரைப்படம் குறித்து புஜிதா பகிர்ந்து கொண்டதாவது, “இயக்குனர் மலர்விழி கதையை விவரித்த விதம் எனக்கு பிடித்திருந்தது. ஒரு பெண் ஒரு கதையை எழுதி இயக்கும்போது பெண் கதாபாத்திரங்களை தனித்துவத்தோடும் திரையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும் என நம்புகிறேன். மலர்விழி மேடம் கதையை விவரித்தபோது, என் கதாபாத்திரத்தை மிகத்தெளிவாக சொன்னார். அவர் சொல்லச் சொல்ல, காட்சிகள் என் கண்முன்னே வந்தது.
பொதுவாக, ஒரு கதை எனக்குப் பிடித்திருந்தாலும் அதில் நடிப்பது குறித்து முடிவெடுக்க எனக்குச் சிறிது காலம் தேவைப்படும். ஆனால், 'சிக்னல் அட் 11:30' படத்தைப் பொறுத்தவரை கதை கேட்டவுடனே சம்மதித்து விட்டேன். எனது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை இந்தக் கதாபாத்திரம் எனக்கு கொடுத்தது. நிஜ வாழ்க்கையில் எனக்கு கார் ஓட்டுவதற்கு பயம். ஆனால், படப்பிடிப்பில் ரவுடிகள் துரத்தும்போது காரை ஓட்டிச் செல்லும் ஒரு காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. அதில் நடிக்க மிகவும் தயக்கமாக இருந்தது. ஆனால், மலர்விழி மேடம் அளித்த நம்பிக்கை எனக்குத் கொடுத்த தைரியத்தால் அந்த காட்சியில் நடிக்க சம்மதித்தேன்.
போக்குவரத்து குறைவாக இருக்கும் என்பதால், நள்ளிரவில் அந்தக் காட்சியைப் படமாக்கினோம். அந்த இரவுடன் படப்பிடிப்பு முடிந்துவிடும் என எதிர்பார்த்தேன். ஆனால், வெவ்வேறு நாட்களில் கூடுதல் காட்சிகளைப் படமாக்குவதற்காக மீண்டும் வர வேண்டியிருந்தது. முதலில் பயமளித்த அந்த அனுபவம், படத்தில் எனக்குப் பிடித்தமான நினைவுகளில் ஒன்றாக மாறிவிட்டது.'' என்கிறார்.
புஜிதா, இதற்கு முன்பு ஸ்ரீகாந்த் ஜோடியாக 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், படையாண்ட மாவீரா' உள்ளிட்ட சில தமிழ் படங்களில் புஜிதா நடித்துள்ளார். அந்த படங்கள் ஓடவில்லை என்கிறார்கள் கோலிவுட்டில்.