உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை: 'புரட்சித்தலைவர் எம்ஜிஆர்' படக்குழு முயற்சி

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை: 'புரட்சித்தலைவர் எம்ஜிஆர்' படக்குழு முயற்சி


பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்றை விவரித்த 'பசும்பொன் தேவர்' படத்தில் நடித்த ஜெ எம் பஷீர் அடுத்து 'புரட்சித்தலைவர் எம்ஜிஆர்' என்ற படத்தில் எம்ஜிஆர் ஆக நடிக்க உள்ளார். அது குறித்து இன்று தனது பிறந்த நாளில் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பசும்பொன் தேவர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற படத்தை தொடங்க உள்ளேன். அக்டோபர் 17 முதல் ராமாபுரத்தில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதில் கலந்து கொள்கிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் இளமைப்பருவம், சினிமா, அரசியல் என பல்வேறு விஷயங்களை அந்த படம் விவரிக்கிறது. இயக்குனர் யார், இசையமைப்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிக்கிறேன்.

நான் எம்ஜிஆர் ஆக நடிக்கிறேன். மற்ற நடிகர் தேர்வு நடந்து வருகிறது. குறிப்பாக ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை திரிஷாவிடம் பேசி வருகிறோம். என் மகளும் அவரும் தோழிகள்; இப்பொழுது இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். திரிஷா நடித்தால் நன்றாய் இருக்கும் என நினைக்கிறேன். படத்தில் கருணாநிதி, அண்ணாதுரை உள்ளிட்டோர்களும் இருக்கிறார்கள். அந்த வேடத்தில் நடிக்கவும் நடிகர்கள் தேர்வு செய்ய உள்ளோம். நான் அதிமுகவில் இருந்தேன், அடுத்து திமுகவில் இருந்தேன், இப்பொழுது தவெக.,வில் இருக்கிறேன். எம்ஜிஆர் படத்தை எடுப்பதற்கு எனக்கு எந்த தடையும் இல்லை. முதல்வர் விஜய் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. அவர் தனது செல்வாக்கால் வருங்காலத்தில் பிரதமர் கூட ஆகலாம். இவ்வாறு ஜெ.எம்.பஷீர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !