‛சினேகா 45' : புன்னகை மாறாத அரசியின் டாப் 10 படங்கள்
தமிழ் சினிமாவின் இரண்டாம் புன்னகை அரசி சினேகா இன்று தனது 45வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார் என்று எழுதும்போது மனசு கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. 'விரும்புகிறேன்' படத்தில் அவர் அறிமுகம் ஆன சமயம் தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்ட 2கே கிட்ஸ் அவரிடம் மனசைப் பறிகொடுத்தார்கள். இந்த வயது நினைவூட்டலை,… '45ல்லாம் ஒரு வயதா ?' என்றே அவர்கள் எடுத்துக்கொண்டு தங்கள் அன்பைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை.
2000ல் அறிமுகமான அவர் இந்த 26 ஆண்டுகளில் 80 படங்கள் வரை நடித்திருக்கிறார். இவற்றில் நட்புக்காக கவுரவ வேடங்களில் நடித்த சில படங்களும் அடக்கம். ஆனால், பொதுவாக அறியப்பட்டதுபோல் 'விரும்புகிறேன்' அவரது முதல் படம் அல்ல. அதற்கும் முன்னரே 'இங்கனே இரு நிலாபக்ஷி' என்ற மலையாளப்படத்தில் தான் அறிமுகமானார்.
சோஷியல் மீடியா என்கிற ஒன்று சுத்தமாக இல்லாத அந்த காலகட்டத்தில், இயக்குநர் சுசி கணேசன் சிநேகாவை அறிமுக நடிகையாக விளம்பரம் செய்ததோடு, ஒரு வார இதழில் போட்டி நடத்தி, அதில் கலந்துகொண்ட 5000 பேரில் ஒருவராக சினேகாவை தேர்வு செய்ததாகவும் சீன் ஓட்டினார். இதனால்தானோ என்னவோ இந்த முதல் படம் ரிலீஸுக்கு இரண்டு வருடங்கள் தாமதமாகி, அதற்குப்பின்னர் அவர் கமிட் ஆன 12 படங்கள் விரும்புகிறேனுக்கு முன்பே திரைக்கு வந்தன.
சக நடிகைகளோடு ஒப்பிடும்போது இந்த கால் நூற்றாண்டு கால கலைப்பயணத்தில் கவர்ச்சியை முற்றிலும் தவிர்த்து கதைகளையும் தனது நடிப்புத்திறனையும் மட்டுமே நம்பிப் பயணித்தவர் சினேகா என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அவரது டாப் டென் படங்கள்…
10. உன் சமையல் அறையில்
மலையாளத்தில் ஹிட் அடித்த 'சால்ட் அண்ட் பெப்பர்' படத்தின் ரீமேக். பிரகாஷ்ராஜ் நாயகனாக நடித்து இயக்கவும் செய்திருந்தார். டெலிபோன் உரையாடலில் சண்டைக்கோழிகளாக அறிமுகமாகும் பிரகாஷ்ராஜும் சினேகாவும் ஒரு கட்டத்தில் எப்படி சிநேகிதர்களாக மாறி காதலிக்கத் தொடங்குகிறார்கள் என்று போகும் கதை. முடிஞ்சா என்கிட்ட மோதிப்பார் என்று நடிப்பில் பிரகாஷ்ராஜுக்கே சவால் விட்டிருப்பார் சினேகா.
9. பிரிவோம் சந்திப்போம்
கரு. பழனியப்பன் இயக்கத்தில் சேரனுக்கு ஜோடியாக சினேகா நடித்த படம். செட்டிநாட்டுக் கலாச்சாரம் தான் மையக்கதை. விசாலாட்சி என்கிற இளம் வயது ஆச்சியாக படத்தில் ஆட்சி செய்திருப்பார் சினேகா. கூட்டுக்குடும்ப வாழ்வு குறித்து பேசும்படம்.
8. வசூல் ராஜா எம்பிபிஎஸ்
கமலுக்கு ஜோடியாக, அதுவும் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிப்பதெல்லாம் அவ்வளவு லேசுப்பட்ட காரியமல்ல. ஆனால் வசூல் ராஜாவில் பாப்பு என்கிற கேரக்டரில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சினேகா.
7. ஏப்ரல் மாதத்தில்
கல்லூரிப் படிப்பு முடியும்போது சில காதல் கதைகளும் அத்தோடு முடிந்து விடுகின்றன. அந்த தருணங்களை காதல் உணர்வு பொங்கப் பதிவு செய்த படம். எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கியிருந்தார். சினேகாவுக்கு ஜோடி ஸ்ரீகாந்த்.
6. ஹரிதாஸ்
ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான, அவ்வளவாக கவனிப்புப் பெறாத ஒரு முக்கியமான படம். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையாக கிஷோர் நடிக்க, அக்குழந்தையின் ஆசிரியையாக, அவனை தன் குழந்தைபோல் கவனித்துப் பராமரிக்கும் ஆசிரியையாக சினேகா தாய்மை பொங்க நடித்திருப்பார்.
5. பார்த்திபன் கனவு
இயக்குநர் கரு. பழனியப்பனின் முதல் படம். இப்படத்தில்தான் சினேகாவும் ஸ்ரீகாந்தும் இணைகிறார்கள். சினேகாவுக்கு காதலியாக, மனைவியாக இரட்டை வேடம். இரண்டிலும் வெளுத்து வாங்கியிருந்தார். 'ஆலங்குயில் கூவும் ரயில்...' அந்தக் குரலில் சினேகா நினைவுக்கு வருவார்.
4. உன்னை நினைத்து
தமிழ் சினிமா பல காலமாய்ப் பார்த்துப் பழகிய முக்கோணக் காதல் கதை. இயக்கம் விக்ரமன். சூர்யாவுக்கு ஜோடியாக லைலாவும்,சிநேகாவும் நடித்திருந்தார்கள். சூர்யா, லைலா இருவரையும் ஜஸ்ட் லைக் தேட் நடிப்பில் தூக்கிச் சாப்பிட்டிருப்பார் சினேகா.
3. ஆட்டோகிராப்
'படத்துல எத்தனை ஹீரோயின் வேணும்னாலும் போட்டுக்கங்க. எனக்கு டூயட் கூட வேண்டாம். லவ் சீன் வேண்டாம். நாலே காட்சிகள் கொடுத்தாலும் நான் யார்னு காட்டுவேன் என்று அள்ளிக் கொண்டு போனவர் சினேகா. 'ஒவ்வொரு பூக்களுமே சொல்லிடுமே' பாடலை காற்றின் எந்த திசையில் கேட்டாலும் மனக்கண்ணில் ஆஜராகிறவர் சினேகாதான்.
2. ஆனந்தம்
லிங்குசாமியின் அறிமுகப்படமான இதிலும் ரம்பா, தேவயானி என்று இன்னும் இரு கதாநாயகிகள் இருந்தாலும் 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்' என்ற ஒரே பாடலில் படத்தின் 'வுமன் ஆப் த மேட்ச்' சாட்சாத் சினேகாவேதான். ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவில் தேவதை என்ற சொல்லுக்கு சினேகா என்று அர்த்தம் என்பதை இப்படம் பார்த்துதான் பலர் தெளிந்து கொண்டார்கள்.
1. புதுப்பேட்டை
அறிமுகமான ஆறாவது ஆண்டு. வருடத்துக்கு ஆறு, ஏழு படங்கள் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த சமயம். செல்வராகவன் வந்து 'புதுப்பேட்டை' கதையையும் சினேகா நடிக்கவிருக்கும் கேரக்டரையும் சொன்னபோது வேறெந்த நடிகையாக இருந்தாலும் கொஞ்சமும் யோசிக்காமல் 'நோ' சொல்லியிருப்பார்கள். ஆனால் துணிந்து நடித்தார். இன்றும் புதுப்பேட்டை பார்க்கிறவர்கள் தனுசுக்கு அடுத்தபடியாக சபாஷ் சொல்லுவது சினேகாவுக்குத்தான்.
மேலே சொன்ன படங்களில் உங்களுக்கு பிடித்த பெஸ்ட் படம் எது... இல்லை வேறு ஏதுவும் படங்கள் இருந்தால் என கமென்ட்டில் சொல்லுங்க, அப்படியே சினோவிற்கு பிறந்தநாள் வாழ்த்தையும் பதிவு செய்யுங்க.