நடிகையாக அறிமுகமாகும் சிவரஞ்சனி மகள்
இன்றைய சினிமா ரசிகர்களுக்கு நடிகை சிவரஞ்சனி பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 90களின் சினிமா ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும் சென்னையில் வளர்ந்தவர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்தவர்.
“மனசார வாழ்த்துங்களேன்' என்ற 1991ம் ஆண்டில் வெளியான தமிழ்ப் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து “தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன் விலங்கு, கலைஞன், ராஜ துரை, செந்தமிழ் செல்வன்,” உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
தெலுங்கில் 'ஆமே' படம் மூலம் ஊஹா என்ற பெயரில் அறிமுகமானார். அங்கும் சில படங்களில் நடித்த பிறகு தெலுங்கு நடிகரான ஸ்ரீகாந்த்தைக் காதல் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமாவில் நடிப்பதை விட்டு விலகினார். அத்தம்பதியினருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
மகன் ரோஷன் மேகா ஏற்கெனவே சில தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது மகள் மேதா மேகா தெலுங்குப் படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பிரித்வி வனம் இயக்கும் இப்படத்தில் ஜெய் ஜஸ்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபல தெலுங்குப் பாடலாசிரியர் ராமோஜகய்யா சாஸ்திரி மகன் சாய் ஹர்ஷா படத்திற்கு இசையமைக்கிறார்.