'தி டர்ட்டி பிக்சர்' இரண்டாம் பாகம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கடந்த 2011ல் பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான படம் 'தி டர்ட்டி பிக்சர்'. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவானது. இப்படத்தில் வித்யா பாலனின் அர்ப்பணிப்பான மற்றும் சிறப்பான நடிப்பிற்காக அவருக்கு தேசிய விருது உள்ளிட்ட பல பாராட்டுகள் கிடைத்தன.
இந்தப் படத்தை ஏக்தா கபூர் தயாரித்திருந்தார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது: தற்போது நான் தயாரிக்கும் மிகப்பெரிய படங்களில் ஒன்று 'தி டர்ட்டி பிக்சர் 2'. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இதைத் திட்டமிட்டு, இப்போதுதான் என்னிடம் சொல்வதற்கு ஒரு சரியான கதை உள்ளது. முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் ஒரு பெண்ணின் வாழ்க்கை மற்றும் அவளது போராட்டங்கள் மையக்கருத்தாக இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.
அதேசமயம் முதல் பாகத்தைப் போலவே இதிலும் ஒரு நாயகியைப் பற்றிய கதையாக இருக்குமா, அதில் வித்யா பாலன் தான் கதாநாயகியாக நடிப்பாரா, இயக்குநர் யார் என்பது குறித்து எந்தத் தகவல்களையும் அவர் வெளியிடவில்லை.