உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தேனிசை தென்றல் என கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின், அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய்
தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' தேவாவின் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். இசையமைப்பாளர் தேவாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக., தலைவர் ஸ்டாலின்
தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கானா பாடல்களைத் திரையிசையில் பிரபலப்படுத்தி, தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் தேவா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்குப் பல வெற்றிப் பாடல்களை வழங்கியவர். மெல்லிசை முதல் மாஸ் பாடல்கள் வரை தனது இசையால் பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்தவர். இசையில் வல்லவர் மட்டுமின்றி, பழகுவதற்கு இனிய நல்ல மனிதராகவும் அனைவரின் அன்பைப் பெற்றவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலின் அஞ்சலி
மறைந்த தேவாவிற்கு இரங்கல் தெரிவித்த திமுக., தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து திநகரில் உள்ள தேவாவின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் எதிர்கட்சி தலைவர் உதயநிதியும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக., எடப்பாடி பழனிசாமி
பிரபல இசையமைப்பாளர் அன்புச் சகோதரர் 'தேனிசைத் தென்றல்' தேவாவின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எளிய மக்களின் வாழ்வியலைத் தனது இசையில் பிரதிபலித்து, மாஸ், மெலடி, பக்திப் பாடல்கள், கானா என அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா மீது மதிப்பும், அதிமுக மீது பேரன்பும் கொண்ட தேவாவின் பிரச்சாரப் பாடல்கள் என்றும் கழகத்தின் குரலாக ஒலிக்கும். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், திரையுலகினர், இசைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணிக்கம் தாகூர் எம்பி
'தேனிசைத் தென்றல்' என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட புகழ்பெற்ற இசையமைப்பாளர் அண்ணன் தேவாவின் மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தொண்ணூறுகளின் தலைமுறையைத் தனது துள்ளலான கானா பாடல்களாலும், நெஞ்சை உருக்கும் மெல்லிசையாலும் கட்டிப்போட்ட மாபெரும் இசைக் கலைஞர். சாமானிய மனிதர்களின் உணர்வுகளைத் திரையிசையாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கும், இசையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன்
தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான இசையாலும், துள்ளல் மிகுந்த கானா பாடல்களாலும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை வென்றவரும், ஏழை, எளிய மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய இசையை அமைத்து, 'தேனிசைத் தென்றல்' என அனைவராலும் போற்றப்பட்டவருமான பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரைப்பட இசையமைப்பாளராக மட்டுமல்லாது, தமிழ் இசை ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம்பிடித்த கலைஞராகவும் திகழ்ந்த திரு. தேவா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடிநிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !