என்னை வயதானவனாக உணர வைக்கிறார் : சிரஞ்சீவி குறித்து அனுராக் காஷ்யப் புகழாரம்
பாலிவுட் நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யப் தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். அப்படி தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய பெயரை பெற்றார். இந்த நிலையில் தெலுங்கில் இயக்குனர் பாபி கொல்லி டைரக்ஷனில் சிரஞ்சீவி நடித்து வரும் காகா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்த வருகிறார் அனுராக். சிரஞ்சீவியும் இவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வரும் அனுராக் காஷ்யப், சிரஞ்சீவி உடன் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து சமீபத்தில் கூறியுள்ளார்.
“இவ்வளவு நீண்ட மற்றும் வெற்றிகரமான சினிமா வாழ்க்கைக்கு பிறகும் சிரஞ்சீவி தனது முதல் படத்தில் வேலை செய்வது போன்றே மிகுந்த ஆர்வத்துடன் கவனத்துடனும் நேர்மையுடனும் உழைப்பது நமக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. இந்த வயதிலும் அவர் உடல் தகுதியின் உச்சத்தில் இருக்கிறார் அனில் கபூரை போலவே சிரஞ்சீவி சாரும் என்னை வயதானவனாக உணர வைக்கிறார். அவரது ஆற்றலும் உற்சாகமும் என்னை மிகவும் ஈர்க்கிறது. படப்பிடிப்பில் அவரை ஒரு வெறித்தனமான ரசிகனை போல கவனித்து வருகிறேன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.