இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் அடுத்த சோகம் : தம்பி மகன், நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். இவரது பெரியப்பா தான் சில தினங்களுக்கு முன் மறைந்த இசையமைப்பாளர் தேவா ஆவார்.
நடிகர் கார்த்திக் சபேஷ், தமிழில் ‛டம், வல்லவன், பட்டத்து யானை, குளிர் 100' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். டயாலிசிஸ் உள்ளிட்ட உடல்நல பிரச்னையால் இரு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருவாரங்களாக இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இவரது உயிர் பிரிந்தது.
கார்த்திக்கின் தந்தை சபேஷும், பிரபல இசையமைப்பாளர் தான். தனது மற்றொரு சகோதரரான முரளி உடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அண்ணன் தேவாவின் படங்களிலும் பணியாற்றி உள்ளார். இவர் கடந்தாண்டு அக்., 23ல் காலமானார். சரியாக ஓராண்டு கடக்கும் நிலையில் அவரது மகன் கார்த்திக்கும் மறைந்துவிட்டார்.
கடந்த அக்., 17ம் தேதி தான் இவர்களது குடும்பத்தின் மூத்த உறுப்பினரான பிரபல இசையமைப்பாளர் தேவா திடீரென காலமானார். அந்த அதிர்ச்சியிலிருந்தே அவரது குடும்பம் இன்னும் மீளவில்லை. அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட ஈரம் காயும் முன்னே அவரது குடும்பத்தில் இன்னொரு மறைவு அவர்களது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இன்னும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கார்த்திக் சபேஷிற்கு ரம்யா கார்த்திக் என்ற மனைவியும், பிரிஷானிதாரா, ஹைரானிதாரா என்ற இரு மகள்களும் உள்ளனர். கீதா சபேஷ் மற்றும் அர்ச்சனா சபேஷ் என்ற இரு சகோதரிகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலியும் செலுத்தினர்.
உடல் தகனம்
கார்த்திக் சபேஷின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜெய், ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் கருணாஸ், சஞ்சீவ், ரமேஷ் திலக், பாடகர் கானா உலகநாதன் உள்ளிட்ட வெகுசில திரைப்பிரபலங்கள் மட்டுமே அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள வளசரவாக்கம் மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.