உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : பணத்தோட்டம் படத்தில் 18 மணி நேரம் நடித்த சரோஜாதேவி

பிளாஷ்பேக் : பணத்தோட்டம் படத்தில் 18 மணி நேரம் நடித்த சரோஜாதேவி

கே.சங்கர் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த படம் 'பணத்தோட்டம்'. சரவணா பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.வேலுமணி தயாரித்தார். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். எம்ஜிஆருடன் சரோஜாதேவி, ஷீலா, நம்பியார், அசோகன், சி.லட்சுமி ராஜ்யம், எஸ்.வி.சுப்பையா, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இந்த படத்தின் கேரக்டருக்கு சரோஜாதேவி தான் பொருத்தமாக இருப்பார் அவரையே புக் செய்து விடுங்கள் என்று எம்ஜிஆர் கூறிவிட்டார். இதனால் இயக்குநர் சங்கரும், தயாரிப்பாளர் வேலுமணியும் சரோஜாதேவியை சந்தித்து பேசிய போது அவர்கள் கேட்ட தேதிகளை வேறொரு படத்திற்கு ஒதுக்கி கொடுத்திருந்தார் சரோஜாதேவி. இதனால் படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதை எப்படி எம்ஜிஆரிடம் சொல்வது என்று எல்லோரும் தயங்கினர். அவர்கள் தயக்கத்தை புரிந்து கொண்ட சரோஜாதேவியின் தாயார், எம்ஜிஆருக்கு போன் செய்து நிலமையை விளக்கியவர் கூடவே ஒரு யோசனையும் தெரிவித்தார். சரோஜாதேவி மற்ற படங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் கால்ஷீட் கொடுத்துள்ளார். இதனால் காலை 7 மணி முதல் 9 மணி வரை தினமும் 2 மணி நேரம் உங்கள் படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார் உங்களுக்கு சம்மதமா, என்று கேட்டார். எம்ஜிஆர் சற்றும் யோசிக்காமல் 'இந்த படத்திற்கு கண்டிப்பாக சரோ வேண்டும் உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள் நானும் அதற்கு ஒத்துழைக்கிறேன்' என்று கூறிவிட்டார்.

அதன்படி காலை 7 மணி முதல் 9 மணி வரை பணத்தோட்டம்' படத்தின் காட்சிகளில் நடித்துவிட்டு, பின்னர் மற்ற படங்களின் படப்பிடிப்பிற்குச் செல்வாராம். 9 நாட்களில் அதாவது 18 மணி நேரத்தில் 'பணத்தோட்டம்' படத்தில் தனது பகுதிகளை நடித்து முடித்தார் சரோஜாதேவி. அவருக்காக எம்ஜிஆரும் அதிகாலை படப்பிடிப்புக்கு வந்ததும் குறிப்பிடத்தக்க அம்சம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !