'நந்தா, மெளனம் பேசியதே' பட தயாரிப்பாளரின் அடுத்த படம்
சூர்யா, லைலா நடித்த 'நந்தா', சூர்யா, திரிஷா நடித்த 'மௌனம் பேசியதே' படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு அடுத்த படத்தை தயாரிக்கிறார்.
அமெரிக்காவில் வசிக்கும் கணேஷ் ரகு முதலில் பாலாவின் 'நந்தா' படத்தை தயாரித்தார். அடுத்து சூர்யா, திரிஷா நடித்த 'மௌனம் பேசியதே' படத்தை தயாரித்தார். இப்போது இராம்.நா இயக்கத்தில், புதிய படம் ஒன்றை மிகப் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இந்த படம் பூஜையுடன் சென்னையில் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இந்த பட தொடக்க விழா நிகழ்வில், சேரன் கிளாப் இன் சொல்ல, சசிகுமார் கேமரா ஆன் செய்ய, பாலா ஆக்ஷன் சொல்ல முதல் காட்சியை இயக்குநர் பாலா படமாக்கினார். இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர், நடிகர் சிவக்குமார், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, திருமதி பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
'நந்தா, மௌனம் பேசியதே' படங்களுக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்திருந்த நிலையில் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தில் நடிப்பவர்கள் விவரம் அறிவிக்கப்பட உள்ளது.