உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 4 மொழியில் ரீமேக் செய்யப்பட்ட பிரபு படம்

பிளாஷ்பேக் : 4 மொழியில் ரீமேக் செய்யப்பட்ட பிரபு படம்

இதுவரை சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்து விட்ட பிரபு, ஹீரோவாக மட்டும் 175 படங்களில் நடித்துள்ளார். அவரது கேரியரில் பல ரீமேக் படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரது படம் ஒன்று 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அது 'பாண்டித்துரை'.

மனோஜ் குமார் இயக்கிய இந்த படத்தில் பிரபுவுடன் குஷ்பு, ராதாரவி, மனோரமா, சுமித்ரா, சில்க் ஸ்மிதா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். கே.பி.பிலிம்ஸ் சார்பில் கே.பாலு தயாரித்திருந்தார்.

அக்கா கணவரின் மீது பாசம் கொண்ட மைத்துணன் கதை இது. சுமித்ராவும், பிரபுவும் அக்கா, தம்பி. அக்காவுக்கு ராதாரவியுடன் திருமணம் நடக்கும், தம்பியை பிரிய முடியாத அக்கா, பிறந்த வீட்டு சீதனமாக தம்பியை உடன் அழைத்துச் செல்வார்.

சென்ற இடத்தில் அக்கா கணவருக்கு வரும் ஆபத்துகளை பிரபு தடுப்பதும், அக்கா கணவர் செய்யும் தவறுகளை திருத்துவதும், அக்கா மகளை காதலிப்பதும்தான் படத்தின் கதை.

100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கில் 'பாவா பவமரிடி' என்ற பெயரிலும், இந்தியில் 'பந்தன்' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'பாவா பாமைதா' என்ற பெயரிலும், பெங்காலியில் 'பலோபஷர் ஷோத்ரு' என்ற பெயரிலும் வெவ்வேறு கால கட்டங்களில் ரீமேக் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !