விரும்பிய வாழ்க்கையை கொடுத்த ‛ஜெயிலர்' : மிர்ணா நெகிழ்ச்சி
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்டோர் 2ம் பாகத்திலும் நடித்திருந்தனர்.
தமிழில் சில சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தவர் மிர்ணா. தன்னுடன் நடித்த ஒரு நடிகருடன் காதல் கொண்டார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்தார். அந்த நடிகர் மிர்ணாவை தான் திருமணம் செய்து கொண்டதாகவும், அவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்.
மலையாளத்திற்கு சென்ற அவர் அங்கு மோகன்லால் ஜோடியாக நடித்து பெரிய நடிகை ஆனார். 'ஜெயிலர்' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அதில் முதல் பாகத்தில் வசந்த் ரவி மனைவியாகவும், ரஜினியின் மருமகளாகவும் நடித்தார். முதல் பாகத்தில் வசந்த் ரவி, ரஜினியால் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது வெளியாகி உள்ள 2ம் பாகத்தில் ரஜினியின் விதவை மருமகளாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் மிர்ணா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரே சூரியன். ஒரே நிலவு. ஒரே சூப்பர் ஸ்டார். 'ஜெயிலர் 2' திரைப்படத்தை ஒரு மெகா பிளாக் பஸ்டராக மாற்றியமைத்தமைக்கு நன்றி. ரஜினிகாந்திற்கு நன்றி. நான் விரும்பிய வாழ்க்கையை எனக்கு அமைத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. அன்பிற்குரிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் 'ஜெயிலர்' படைப்பில் என்னை ஒரு அங்கமாக்கியதற்கும், என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.