உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வசூலுக்குத் தொடர்பு இல்லாத 'டிரைலர் வியூஸ்கள்'

வசூலுக்குத் தொடர்பு இல்லாத 'டிரைலர் வியூஸ்கள்'

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் புதிய படங்களுக்கான, முன்னணி நடிகர்களின் படங்களுக்கான டிரைலர்கள், டீசர்கள், பாடல்கள், எவ்வளவு பார்வைகள் அதாவது வியூஸ்கள் போகிறது என்பதை ஒரு சாதனையாகக் கடந்த சில வருடங்களாகப் பேசி வருகிறார்கள்.

யு டியூப் வீடியோ தளம்தான் அவற்றில் முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் இருக்கிறது. கடந்த சில வருடங்களில் வேறு சில சமூக வலைத்தளங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், யு டியூப் தளம் தருவதே மற்ற தளங்களைக் காட்டிலும் முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ஜெயிலர் 2' படத்தின் டிரைலர் இதுவரையில் 26 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது. ஆனால், படத்தின் வசூல் 500 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்துள்ளதாக சொல்லப்படும் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் டிரைலர் 63 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படம் 300 கோடி வசூலைக் கடந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியானது.

இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த மற்றொரு படமான சூர்யா நடித்த 'கருப்பு' படத்தின் டிரைலர் 35 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படத்தின் வசூல் 300 கோடி பிளஸ் என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சூர்யா நடிப்பில் வெளிவந்த மற்றொரு படமான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் டிரைலர் 8.8 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றது. ஆனால், அதன் வசூல் 260 கோடி பிளஸ் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

சூரி நடித்து வெளிவந்த 'மண்டாடி' டிரைலர் 18 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் 150 பிளஸ் கோடி.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து வெளிவந்த 'டிசி' பட டிரைலர் பார்வைகள் 22 மில்லியன், ஆனால், அதன் அதிகாரப்பூர்வ வசூல் 100 பிளஸ் கோடி.

சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'பராசக்தி' பட டிரைலரின் பார்வைகள் 55 மில்லியன். அப்படம் 100 கோடியைத் தொட்டதாக அறிவித்தார்கள்.

மேலே குறிப்பிட்டவை இந்த ஆண்டில் வெளியான 100 கோடி வசூல் என்று சொல்லப்பட்ட படங்களின் உதாரணம் மட்டுமே. டிரைலர்களின் வரவேற்புக்கும், படங்களின் வசூலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !