பிளாஷ்பேக் : சத்தமின்றி சாதனை படைத்த இலங்கை இசை அமைப்பாளர்
தமிழ் சினிமாவிற்கு பல்வேறு மொழிகளில் இருந்து வந்து இசை அமைப்பாளர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இலங்கையில் இருந்து வந்து சாதனை படைத்தவர் எஸ்.எஸ்.வேதாச்சலம் என்ற இயற்பெயரை கொண்ட வேதா. 1950களில் சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். 'மர்ம வீரன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் 1956ல் வெளிவந்தது. ஸ்ரீராமும், வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்திருந்தனர்.
'மர்ம வீரனில்' 10 பாடல்கள் இடம் பெற்று அத்தனையும் பெரிய வரவேற்பை பெற்று யார் இந்த வேதா என்ற கேள்வியை எழுப்பியது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மாகதேன் போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய காலத்தில் அவர்கள் இருவருக்கும் இடையில் சத்தமின்றி சாதனை படைத்தவர் வேதா. ராகங்களை மெல்லிசையாக வழங்குவதில் விற்பன்னராக விளங்கியவர் வேதா. இலங்கையில் கலாச்சார பாடலான 'பைலா' பாணியில் இங்கு பல பாடல்களை உருவாக்கினார்.
டி.எம்.சவுந்தரராஜனின் இனிய குரலில் உருவான அந்தப் பாடல்தான் 'டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கைப் பாரு தங்கம தில்லாலே'. என்ற பாடல் பைலா பாணியில் உருவானதுதான்.
மின்னல் வீரன், பார்த்திபன் கனவு, கொஞ்சும் குமரி , பெண் மனம், பாசமும் நேசமும், சித்திராங்கி, வீராங்கனை, அம்மா எங்கே, வல்லவனுக்கு வல்லவன், சரஸா பி.ஏ , இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன், யார் நீ , எதிரிகள் ஜாக்கிரதை, அதே கண்கள், காதலித்தால் போதுமா, மனசாட்சி, நான்கு கில்லாடிகள், உலகம் இவ்வளவுதான், பொண்ணு மாப்பிள்ளே, சி.ஐ.டி சங்கர் போன்றவை வேதா இசை அமைத்த முக்கியமான படங்கள்.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்தார். குறிப்பாக அதிகமான ஜெய்சங்கர் படங்களுக்கு இசை அமைத்தார். இங்கு வாய்ப்புகள் குறைந்ததும் இலங்கைக்கே திரும்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.