நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்துள்ள 'ராமாயணா' படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ராவணனாக யஷ், ஹனுமனாக சன்னி தியோல் மற்றும் சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
இப்படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான 'மங்கள் ராவ்' என்ற பாடல் வெளியானது. அரிஜித் சிங் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடல், ராமன் மற்றும் சீதையின் திருமணப் பந்தத்தையும், அயோத்திக்கு சீதையின் வருகையையும் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் சைந்தவி, அபய் ஜோத்புர்கர் பாடியுள்ளனர்.
இந்த பாடலை சுபி மற்றும் கவாலி இசை மரபுகளை கலந்து ரஹ்மான் உருவாக்கி உள்ளார். இவைகள் இந்து கலாச்சாரத்தை தாண்டியவை. இந்து புராண படத்திற்கு சுபி மற்றும் கவாலி பாணியிலான இசை அமைக்கப்பட்டிருப்பது தவறானது என்ற கருத்து நிலவி வருகிறது. பக்தி மற்றும் நம்பிக்கை சார்ந்த புராண படத்திற்கு காதல் திரைப்படத்தைப் போல இசை அமைத்திருப்து தவறானது என்ற கருத்தும் எழுந்துள்ளது. அதோடு இந்த பாடலை 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தின் 'என்ன சொல்லப் போகிறாய்' மற்றும் 'ராக்ஸ்டார்' படத்தின் 'குன் பாயா குன்' ஆகிய பாடல் ளை ரீமிக்ஸ் செய்தது போன்று இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு பதிலளித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான். நாங்கள் ஒரு பாடலை உருவாக்கும் போது பல்வேறு கட்ட ஆய்வுகள், வடிகட்டுதல்கள் மற்றும் மாற்றங்களை மேற்கொள்கிறோம். அதையெல்லாம் தாண்டிப் பாடல் வெளிவந்த பிறகு எழும் விமர்சனங்களைக் கவனிப்பதற்கு எங்களிடம் ஆற்றல் இருப்பதில்லை. பலமுறை சோதித்துப் பார்த்த பின்னரே பாடலை வெளியிடுகிறோம். நான் என் பணியை உண்மையாகவும் அர்ப்பணிப்போடும் செய்துள்ளேன். மக்கள் இந்தப் பாடலைக் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.