'மகாநடி' படம் எனக்கு பொருளாதார ரீதியாக பயத்தை ஏற்படுத்தியது ; கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்திலிருந்து தமிழ் திரையுலகுக்கு வந்தவர். வந்த வேகத்திலேயே தெலுங்கிலும் வரவேற்பு பெற்று மாறி மாறி நடித்து வந்தார். குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தினார். சாவித்திரி கதாபாத்திரத்தில் அவர் நடித்த மகாநடி திரைப்படம் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று தந்தது. ஆனால் அந்த படம் வெளியான பிறகு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவருக்கு எந்த பட வாய்ப்பும் இல்லை. அந்த சமயத்தில் அவருக்கு திடீரென பொருளாதார ஸ்திரத்தன்மை கேள்விக்குறியானது போலவும், நிதி நிலைமை தலைகீழானது போலவும் ஒரு உணர்வு ஏற்பட்டதாக சமீபத்தில் கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
ஆனால் அந்த இடைவெளி கூட, மகாநடி படம் பார்த்தவர்கள் இனி தன்னை எந்தவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க வேண்டும் என யோசித்து குழம்பியதுதான் புதிய வாய்ப்புகள் வர தாமதமானதற்கு காரணம் என்றும் கூறியுள்ள கீர்த்தி சுரேஷ், அந்த ஆறு மாதங்கள் எந்த படமும் இல்லாமல் வீட்டில் இருந்தாலும் தனது உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி, சாப்பாட்டு வழிமுறை என எல்லாவற்றையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வர பயன்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.