உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 40 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ் திரையுலகின் முதல் 70எம்எம் திரைப்படம்

பிளாஷ்பேக்: 40 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ் திரையுலகின் முதல் 70எம்எம் திரைப்படம்


கலையுலகில் கதாநாயக நடிகர்களுக்கு என வகுக்கப்பட்டு வைத்திருந்த வரையறைகளை எல்லாம் தகர்த்தெறிந்து, தான் கொண்டிருந்த நம்பிக்கையையே மூலதனமாக்கி, தனது உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், தனித்துவமிக்க ஸ்டைலாலும், தனக்கான ஒரு பாணியை உருவாக்கி, ஒரு தனிப்பெரும் உச்ச நடிகராக இன்று வரை நிலைத்து நிற்கும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் என்பது அனைவரும் அறிந்ததே.

இயக்குநர் கே பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் போன்ற திரை ஆளுமைகளின் இயக்கத்தில் எண்ணற்ற திரைப்படங்களில் இவர் நடித்துப் புகழ் பெற்றிருந்தாலும், அதிக அளவில் வர்த்தக ரீதியிலான வெற்றித் திரைப்படங்களைத் தந்து, இவரை ஒரு சூப்பர் ஸ்டாராக நிலை நிறுத்தக் காரணமாக இருந்த இரண்டு குறிப்பிடும்படியான இயக்குநர்கள் என்றால், ஒருவர் இயக்குநர் எஸ் பி முத்துராமன் மற்றொருவர் மறைந்த இயக்குநர் ராஜசேகர். இவ்விருவரில் இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த “தம்பிக்கு எந்த ஊரு”, “படிக்காதவன்”, “மாப்பிள்ளை”, “தர்மதுரை” போன்ற அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றித் திரைப்படங்களாக நடிகர் ரஜனிக்கு அமைந்திருந்தன. அந்த வரிசையில் இயக்குநர் ராஜசேகர், ரஜினி கூட்டணியில் வந்த மற்றுமொரு பிரமாண்டத் திரைப்படம்தான் இந்த “மாவீரன்”.

1985ம் ஆண்டு அமிதாப்பச்சன், அம்ரிதா சிங், தாராசிங், நிரூபராய், பிரேம் சோப்ரா ஆகியோர் நடித்து, மன்மோகன் தேசாய் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்ற “மர்த்” என்ற திரைப்படத்தின் தமிழாக்கமாக இயக்குநர் ராஜசேகர் இயக்கிய திரைப்படம்தான் இந்த “மாவீரன்”. சினிமாஸ்கோப்பில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படமான “ராஜ ராஜ சோழன்” திரைப்படத்தைப் போல், 70எம்எம் திரைப்படமாக உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற விளம்பரத்தோடு வந்த திரைப்படம்தான் இந்த “மாவீரன்”. ஹிந்தியில் அமிதாப்பச்சன் தந்தையாக நடித்திருந்த தாராசிங் கதாபாத்திரத்திற்கு தமிழ் பதிப்பில் முதல் தேர்வாக இருந்தவர் சிவாஜிகணேசன். பின்னர் ஏதோ காரணங்கள் காரணமாக அவர் நடிக்க இயலாமல் போக, ஹிந்தியில் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நடிகர் தாராசிங்கையே தமிழிலும் நடிக்க வைத்திருந்தனர் படக்குழுவினர்.

மேலும் 6 ட்ராக் ஸ்டீரியோபோனிக் ஒலி அமைப்போடு வந்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமைக்கும் உரிய திரைப்படமான இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், அம்பிகா, தாராசிங், சுஜாதா, ஜெய்சங்கர், நாகேஷ், விஜயகுமாரி, தேங்காய் சீனிவாசன், விஜயகுமார், சுனிதா, ஆனந்த்பாபு என பலர் நடித்திருக்க, மிகுந்த பொருட் செலவில், பிரமாண்டமாக தயாரித்திருந்தனர் “பத்மாலயா ஸ்டூடியோஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம். வாலி, வைரமுத்து, கங்கை அமரன் ஆகியோர் பாடல்கள் எழுத இசையமைத்திருந்தார் இளையராஜா.

ரஜினி, இளையராஜா, பிரமாண்டம் என இத்தனை அம்சங்களோடு 1986ம் ஆண்டு நவம்பர் 1 தீபாவளி நன்னாளை சிறப்பிக்கும் வண்ணமாக மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவந்த இந்த “மாவீரன்” திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஒரு தோல்விப் படமாகவே அமைந்திருந்தது. ரஜினி, இயக்குநர் ராஜசேகர் கூட்டணியின் முதல் தோல்விப் படமாக அறியப்பட்ட இந்த “மாவீரன்” திரைப்படம்தான் தமிழ் திரையுலகின் முதல் 70எம்எம் திரைப்படம் என்ற பெருமையை தன்னகத்தே வைத்து, தனது 40வது ஆண்டை இப்போது நிறைவு செய்திருக்கின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !