உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 234 தொகுதிகளிலும் புதிய திட்டம்... என் பின்னால் இருப்பது யார்.? : ‛ஓம்' பட விழாவில் தனுஷ் பேச்சு

234 தொகுதிகளிலும் புதிய திட்டம்... என் பின்னால் இருப்பது யார்.? : ‛ஓம்' பட விழாவில் தனுஷ் பேச்சு

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். நவ., 20ம் தேதி வெளியாகிறது. சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த ஓம் பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது...

ஐந்து ஹீரோக்கள்
​ஓம் படத்தில் ஐந்து கதாநாயகர்கள் இருக்கிறார்கள். மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, சாய் அபயங்கர், அதற்குப் பிறகுதான் நான். இது பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் அல்ல, பல கதாநாயகர்களைக் கொண்ட படம். ​ராஜ்குமார் போல ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை. அவருக்குத் தன் மீதும், தன் கதையின் மீதும் அசாத்திய நம்பிக்கை உண்டு. தன் குழுவிடமிருந்து எப்படி வேலையை வாங்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும், அதேசமயம் ரசிகர்களுக்கு என்ன வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு 'அலாக்கா லூவா' பாடல் அவசியமான ஒன்றல்ல, ஆனால் என் ரசிகர்களுக்காக நான் நடனமாட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

மம்மூட்டினா ‛தக் லைப்'
​ஒரு தம்பி ரீல் போட்டுச்சு, எல்லாருக்கும் இதயம் 'லப்டப் லப்டப்'னுதான் அடிக்கும். எனக்கு 'பேன்ஸ் பேன்ஸ் பேன்ஸ்'னு தான் அடிக்கும். மம்மூட்டினா 'தக் லைப்'. 'தக் லைப்'னா மம்முட்டி. எந்தக் கேள்விக்கும் நார்மலா பதிலே வராது. நான் ஒரு மலையாளப் படத்தில் சின்னதா ஒரு கேமியோ பண்ணியிருக்கேன்; அப்போ அவர் ரொம்ப அமைதியா இருந்ததைப் பார்த்து ரொம்ப கறாரான மனிதரா இருப்பாரோன்னு நினைச்சேன். அதற்குப் பிறகு ஓம் படத்துக்காகத்தான் அவரை சந்தித்தேன். அப்போதான் தெரிஞ்சது அவர் எவ்வளவு இனிமையான, அன்பான மற்றும் நகைச்சுவை உணர்வுள்ள மனிதர் என்று. அவர் ரொம்பவே சுவாரஸ்யமான ஆளுமையும் கூட.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்
என் ரசிகர்களுக்காக நிறைய நல்ல திட்டங்களைச் பண்ணிட்டு இருக்கீங்க. நான் என் பாக்கெட்டிலிருந்து ஒரு பைசா கூட செலவு செய்யலை; என் பேர்ல உங்க சொந்தப் பணத்துல இதைச் செய்றீங்க. ஒரே ஒரு வேண்டுகோள், உங்க குடும்பத் தேவைக்கு மிஞ்சி இருந்தா தாராளமா பண்ணுங்க. உங்க குடும்பம் இதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. நவம்பர், டிசம்பர்ல மழை இருக்கும். எந்தப் பாதிப்பும் இல்லாம கடந்து போயிட்டோம்னா சந்தோஷம். அப்படி ஏதாவது ஆச்சுன்னா, நீங்க மக்களுக்கு உதவ முன்வரணும்.

நிறைய வதந்திகள்
என் வாழ்நாள் முழுக்கவே நான் ஒரு அண்டர்டாக்தான். ரொம்பக் குறைச்சு எடை போட்டு, மட்டம் தட்டுவாங்க. ஆனா ஒண்ணு, அவங்க குறைச்சு எடை போடப் போட, மட்டம் தட்டத் தட்ட, அவங்களுக்கே தெரியாம என்னைய மோட்டிவேட் பண்ணிட்டு இருக்காங்க. ​ என் பெயரை வைத்து நிறைய வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. சமீபகாலமாக, இவரை அவங்க இயக்குறாங்க, இவர் பின்னாடி இவங்க இருக்காங்க, இவர் பக்கம் இவங்க இருக்காங்க என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. ​என்னை இயக்குவதற்கு இறைவன், என் பின்னாடி இருக்கிறது ரசிகர்கள், மற்றும் என் பக்கம் மக்கள். மக்கள் என் பக்கம்.

234 தொகுதிகளிலும் டியூஷன் சென்டர்
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் டியூஷன் சென்டர்கள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக சென்னையில் 3 இடங்களிலும், கன்னியாகுமரியில் 2 இடங்களிலும் தொடங்க உள்ளோம். அடுத்த ஆண்டு தமிழகம் முழுவதும் டியூஷன் சென்டர்கள் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். இளைஞர்கள் நன்றாகப் படிக்க வேண்டும். எல்லோருக்கும் கண்டிப்பாகத் தெரிய வேண்டிய ஒன்று... அறிய வேண்டிய ஒன்று... அரசியல்.

தலைகுனிய விட மாட்டேன்
எண்ணம் போல் வாழ்க்கை. என் எண்ணம் யார் மீதுனு நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. நீங்கதான் என் வாழ்க்கை. நிறைய ஊர்ல இருந்து வந்திருப்பீங்க. எல்லாரும் பத்திரமா வீட்டுக்குப் போங்க. நான் எது செய்தாலும் அது உங்கள் நன்மைக்காக மட்டும்தான் செய்வேன். உங்களை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டேன்.

இவ்வாறு தனுஷ் பேசினார்.

கூட்ட நெரிசல்
ஓம் பட நிகழ்ச்சி நடந்த இடத்தில், 8,500 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அரங்கிற்குள், 1,500 பெண்கள், 7,000 ஆண்கள் அனுமதிக்கப்பட்டனர். கள்ள சந்தையில் கூடுதல் நுழைவுச் சீட்டுகள் 500 முதல் 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டன. நுழைவு சீட்டு வைத்திருந்த பலரை, போலீசார் உள்ளே அனுமதிக்காமல், நுழைவு வாயில் கேட்டை இழுத்து மூடினர். இதனால், அதிருப்தியடைந்த ரசிகர்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !