வில்லனாக மோகன் ராஜா
‛‛ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தனி ஒருவன்'' உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை இயக்கியவர் மோகன் ராஜா. நடிகர் ரவி மோகனின் அண்ணனான இவர் ‛தனி ஒருவன் 2' படத்தை இயக்க நீண்டகாலமாக முயற்சித்து வருகிறார். சில காரணங்களால் அது தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது. இப்போது நடிகராக, வில்லனாக களமிறங்கி உள்ளார்.
எல்கே சுதீஷ் எம்பி தயாரிப்பில் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன், ஷிவானி ராஜசேகர் நாயகன், நாயகியாக நடிக்கும் படம் ‛வாண வேடிக்கை'. இதில் வில்லனாக களம் இறங்குகிறார் மோகன் ராஜா. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதை நடிகர்கள் ஆர்யா, ரவி மோகன் வெளியிட்டனர்.
சண்முக பாண்டியன் இதுவரை அவர் செய்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ரோலில் உள்ளார். சண்டைக் காட்சிகளில் அவரது அப்பா விஜயகாந்த்தை நினைவுப்படுத்துகிறார். அதேபோல் தனி ஒருவன் படத்தில் வரும் அரவிந்த்சாமி கதாபாத்திரத்துக்கு இணையாக இந்த படத்தில் மோகன் ராஜாவின் தோற்றம் மற்றும் வில்லன் வேடம் அமைந்துள்ளது.
'வாண வேடிக்கை' படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன், இந்துமதி, ஜெயப்பிரகாஷ், இயக்குனர் தமிழ், சித்ரா லக்ஷ்மன், கிரண், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, சுபிக்ஷா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.