'மூக்குத்தி அம்மன்' வெறும் டைட்டில்தான் படம் வேற : சுந்தர்.சி
ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் 2ம் பாகம் தீபாவளியை முன்னிட்டு நாளை (நவ.,5) வெளியாகிறது. இதனை ஐசரி கணேஷ், குஷ்பு சுந்தர், நயன்தாரா இணைந்து தயாரிக்கிறார்கள். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைக்கிறார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து சுந்தர்.சி கூறியிருப்பதாவது: படத்தின் டைட்டில் 'மூக்குத்தி அம்மன்' என்று இருந்தாலும் இதற்கு முன்பு வெளியான படத்திற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இது வேறு மாதிரியான கதை. குறிப்பாக சொன்னால் எனது 'அரண்மணை' பட ஸ்டைலில் இருக்கும். இப்படியெல்லாம் நடக்குமா என்று லாஜிக்காக கேட்டால் நடக்காது என்றுதான் சொல்வேன். என்னை பொறுத்துவரை பணம் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனை திருப்தியாக அனுப்பி வைக்க வேண்டும் என்பதே.
பொதுவாக அம்மன் படம் என்றால் அந்த ஊருக்கோ, குடும்பத்துக்கோ, ஒரு குழந்தைக்கோ ஏதாவது தாங்க முடியாத கஷ்டம் வரும். அப்போது தெய்வம் வந்து அருள் பாலித்துக் காப்பாற்றும். ஆனால், அந்தத் தெய்வத்துக்கே ஒரு ஆபத்து வந்தால் என்னவாகும், தன்னைத் தானே தெய்வம் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலை எப்படி உருவானது, அதன் விளைவுகள் என்னென்ன என்பதுதான் இந்தப் படத்தின் அடிப்படை. இந்தப் படம் இரண்டு காலகட்டங்களில் நடக்கிறது. நிகழ்காலத்தையும், கடந்தகாலத்தையும் இணைக்கிற கதையாக இருக்கும்.
படத்தை திரில்லராகப் பார்த்தால் அப்படியே த்ரில்லர் வடிவிலும் இருக்கும். பிரமாண்டப் படமாகப் பார்த்தால் அப்படியே தியேட்டரில் அசரடிக்கும். ஆக்ஷன் படமென்றாலும் அந்த நம்பிக்கையைத் தக்கவைக்கும். பக்திப் படம் அந்த ஏரியாவிலும் அதிரிபுதிரியாக இருக்கும்.
போர்க்களக் காட்சிகள், கிளைமாக்ஸ் வேறு ஓர் உலகத்துக்குக் கொண்டு போகும். ஒவ்வொரு மெயின் டெக்னீஷியனுக்குப் பின்னாலும் நூற்றுக் கணக்கானவர்கள் உழைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஹீரோயின் நயன்தாரா என்றால், ஹீரோ இந்தப் படத்தில் விடாமல் பணிபுரிந்த 600 டெக்னீஷியன்கள்தான். என்கிறார் சுந்தர்.சி.