வருகிறது 'தமிழ்ப்படம் 3': படப்பிடிப்பு துவங்கியது
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நாயகனாக நடித்து 2010ல் வெளிவந்த படம் 'தமிழ்ப் படம்'. படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு அதுவரை தமிழில் வந்த பல படங்களை கலாய்த்து காட்சிப்படுத்திய விதம் ரசிகர்களை கவர்ந்தது. படமும் ஹிட்டானது. இதனைத்தொடர்ந்து அதேபாணியில் 'ஸ்பூப்' வகையிலான படமாக 2018ல் 'தமிழ்ப் படம் 2' வெளியானது. அதில் திரைப்படங்களை மட்டுமல்லாமல் அரசியல் உள்ளிட்ட விஷயங்களையும் கலாய்த்து எடுத்திருந்தனர். இதுவும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், 'தமிழ்ப் படம் 3' இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பமாவதாக இயக்குனர் சி.எஸ்.அமுதன் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதிலும் சிவா நாயகனாக நடிக்கிறார். அதுல்யா ரவி நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. போஸ்டரில் சிவா கோட் சூட் அணிந்து பின்புறம் திரும்பி நிற்பதுபோலவும், ஏலியன் விமானம் போன்ற ஒன்று பூமிக்கு வருகிறது; அதனை சிவா பார்த்தபடி இருக்கிறார். ஏலியன்களுடன் சேர்ந்து சினிமா, அரசியல் மற்றும் வைரல் சம்பவங்களை கலாய்த்து இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.
முதல் பாகத்தில் மிர்ச்சி சிவாவாக இருந்து, 2ம் பாகத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் நடித்தார் சிவா. தற்போது இந்த படத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடித்து 'இன்டர்கேலக்டிக் சூப்பர் ஸ்டார்' (விண்மீன்களுக்கு இடையேயான சூப்பர் ஸ்டார்) பட்டத்துடன் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.