உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: வெள்ளி விழா தீபாவளி படம்: லேட் பிக்அப் ஆன 'காசி'

பிளாஷ்பேக்: வெள்ளி விழா தீபாவளி படம்: லேட் பிக்அப் ஆன 'காசி'


25 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'காசி' படம் விக்ரம் கேரியரில் மிக முக்கியமான படம். பெரிய வெற்றி பெறாவிட்டாலும் விக்ரமின் திறமையையும், நடிப்புக்காக அவரின் அர்ப்பணிப்பையும் வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டிய படம். வினயன் எழுதி இயக்கிய மலையாளத் திரைப்படமான 'வசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்' படத்தின் ரீமேக்தான் 'காசி'. அவரே இயக்கவும் செய்தார். இந்த படத்தின் மூலம் மலையாள நடிகைகளான காவேரியும், காவ்யா மாதவனும் தமிழுக்கு வந்தார்கள். இளையராஜா இசையமைத்தார்.

இதன் படப்பிடிப்பு 45 நாட்களில் நிறைவடைந்தது. பார்வையற்ற கிராமத்து பாடகர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, விக்ரம் தனது கண்களை மேல்நோக்கிச் சுருக்கி, கண்களின் வெள்ளைப்பகுதி மட்டுமே தெரியுமாறு பயிற்சி செய்தார். படப்பிடிப்பு தொடங்கியதும், நாள் முழுவதும் அவர் தனது கண்களை அவ்வாறே மேல்நோக்கி வைத்திருந்தார். கண் கோணலாகிவிடக்கூடாது என்பதற்காக, அன்றைய படப்பிடிப்பு முடிந்ததும் கண்களுக்கான பயிற்சிகளைச் செய்து வந்தார்.

இப்படத்தில் நடித்ததன் விளைவாக, பிற்காலத்தில் அவரது பார்வைத்திறன் பலவீனமடைந்தது. தனது தோலின் நிறத்தை அடர் நிறமாக மாற்றிக்கொள்ள, சென்னையில் கடற்கரையோரத்தில் இருந்த தனது வீட்டின் மொட்டை மாடியில் வெயிலில் அமர்ந்து, தோல் கருகிய தோற்றத்தைப் பெற்றார்.

ஆனால் இத்தகைய கடின உழைப்பு தீபாவளி வெளியீட்டுக்கு வந்த மற்ற கமர்ஷியல் படங்களுக்கு முன்னால் பெரிதாக கவனிக்கப்படவில்லை. இதனால் விக்ரம் பல நாட்கள் கவலையில் வீட்டைவிட்டே வெளிவரவில்லை. தீபாவளி அலை ஓய்ந்ததும், மற்ற படங்களை விட 'காசி' படத்தையை மீடியாக்கள் கொண்டாடியது. இதனால் படத்தின் அருமையை உணர்ந்த ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்தனர். இதனால் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு காசி நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த படம் விக்ரமிற்கு பல விருதுகளை பெற்றுத் தந்தது. அவரது கேரியரில் முக்கியமான படமாகவும் அமைந்தது. இந்த தீபாவளியில் 'காசி' பார்க்க வேண்டுமா. யுடியூப்பில் சந்திக்கலாம். நல்ல குவாலிட்டியுடன் பார்க்க வேண்டுமா அமேசான் பிரேம் போகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !